நாகை: நாகையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்றிரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகை செல்கிறார். நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகையில் நாளை (3ம் தேதி) நடக்கிறது. இந்த விழாக்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்றிரவு (2ம் தேதி) 7.45 மணிக்கு திருச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு நாகை செல்கிறார். அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து நாளை (3ம் தேதி) காலை 9.45 மணிக்கு காரில் புறப்பட்டு நாகை புத்தூர் ரவுண்டானா கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழாவில் முதல்வர் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். காலை 11 மணிக்கு நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐடிஐ திடலில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 38,956 பேருக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள தளபதி அறிவாலயத்தை திறத்து வைக்கிறார். மதியம் 12.40 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 4 மணிக்கு தளபதி அறிவாலயத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைதொடர்ந்து நாகையில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகை பயணம் appeared first on Dinakaran.