சென்னை: உலக சிக்கன நாள் முன்னிட்டு செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30ம் நாள் “உலக சிக்கன நாள்” கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச் செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த “உலக சிக்கன நாள்” வலியுறுத்துகிறது.
வரவுக்கு மேல் செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் எத்தகைய இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதனை அய்யன் வள்ளுவப் பெருந்தகை “அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்ற குறட்பா மூலம் “ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கைக் கெடும்” என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. இது சேமிப்பவர்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகிறது. தனிமனிதனின் சேமிப்பு அக்குடும்பத்துக்குப் பயன்படுவதோடு மட்டும் அல்லாமல், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. இதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிப் பணிகளில் சிறுசேமிப்புத் திட்டங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அமைகிறது.
“சிறுகக் கட்டி பெருக வாழ்” என்னும் பொன் மொழிக்கேற்ப, பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், முறைசாராத் தொழிலில் ஈடுபடுவோர், சுய தொழில் புரிவோர், மகளிர் ஆகிய அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்புக் கணக்கினைத் துவங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன். “செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்” என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முதல்வர் உலக சிக்கன நாள் வாழ்த்துச்செய்தி செலவினை சுருக்கிடுவோம் சேமிப்பை பெருக்கிடுவோம் appeared first on Dinakaran.