முதல்வர் அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடத்தில் சேர்ப்பதில் என்றென்றும் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்

1 week ago 3

சென்னை: முதல்வர் அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் என்றென்றும் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். இதுகுறித்து, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு துறையின் கீழ் பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021ன் கீழ் 11.83 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,918 கோடி அளவிற்கு தள்ளுபடி சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி 2021ன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழு கடன்களில், 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவை உள்ள கடன் தொகை ரூ.2,117 கோடியை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,01,895 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 10,56,296 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

7.5.2021 முதல் 31.3.2025 வரை 68,01,609 விவசாயிகளுக்கு ரூ.54,968 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 7.5.2021 முதல் 31.3.2025 வரை 12,28,416 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,610 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 1,94,35,771 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் என்றென்றும் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமேயானால் மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள், மாணவர் நலன் சார்ந்த திட்டங்கள், ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், தொழிலாளர்கள், உழைக்கும் வர்கத்தினர் என எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ,10,14,368 கோடி முதலீடுகளை ஈர்த்து, 32,04,895 வேலைவாய்ப்புகளை உருவாக்கியதன் விளைவு, 2021-22ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 8%க்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்துடன் நிலையான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி விகிதத்தைவிட 2024-25ம் ஆண்டில் 9.69% வளர்ச்சி விகிதத்துடன் எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி அதிகபட்ச வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முதல்வர் அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடத்தில் சேர்ப்பதில் என்றென்றும் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article