தஞ்சை: தஞ்சை மாவட்டம் என்றாலே அது விவசாயம் மட்டும் தான். விவசாய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தங்களது மேல் படிப்பை முடித்து விட்டு சென்னை, மும்பை, கர்நாடகா, புனே, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தங்களது குடும்பங்களை பிரிந்து பணி செய்து வருகிறார்கள். இந்நிலையில், படித்த இளைஞர்கள், பெண்கள் ஐடி வேலைகளை பெற உதவும் வகையிலும் சமூகப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்காகவும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி டெல்டா மாவட்டத்தின் மைய பகுதியான தஞ்சையில் சுமார் 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டிடமாக நியோ டைடல் பூங்காவை தமிழக அரசு அமைத்து தந்துள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்கள் சுமார் 500 பேருக்கு மென்பொருள் வல்லுநர்களாகவும், சுமார் 600 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த டைடல் பூங்காவை கடந்த செப்.23ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து நிறுவன உரிமையாளர்களுக்கு பணி ஆணை வழங்கினார். இந்த மினி டைடல் பூங்காவில் மொத்தமாக 14 நிறுவனங்கள் செயல்படும் அளவிற்கு இடவசதி உள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கு 3500 முதல் 3700 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த டைடல் பூங்காவில் அனைத்து இடங்களும் முன்னணி நிறுவனங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில், ‘தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட டைடல் நியோ பார்க் 15 நாட்களிலேயே ஒட்டுமொத்த பகுதியும் நிறுவனங்களால் நிரம்பியது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆழமாக ஊடுருவும் முயற்சியில் அரசு இருப்பதால் பெருமிதம்’ என்று பதிவிட்டுள்ளார்.
The post முதல்வரால் திறக்கப்பட்ட 2 வாரத்தில் தஞ்சை நியோ டைடல் பார்க் நிறுவனங்களால் நிரம்பியது appeared first on Dinakaran.