முதல் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்

1 week ago 5

மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் கண்டறியும் ஆற்றலை நெறிப்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தைகள் நிதியகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. கேள்வி கேட்பதன் மூலமே புதிய கண்டுபிடிப்புகள் தோன்றும். மரத்திலிருந்து ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது என்ற கேள்வியைத் தனக்குள் நியூட்டன் கேட்டதன் விளைவால் புவியீர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல் ஒரு கேள்வியால்தான் நம் தமிழ்நாட்டு அறிவியல் அறிஞருக்கு நோபல்பரிசு கிடைத்தது. அவர்தான் சந்திரசேகர் வெங்கட்ராமன் கேட்ட கேள்வி, கடல் ஏன் நீலநிறத்தில் தோன்றுகிறது? அப்போது அவருக்கு உதவ இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை. குறைந்த செலவில் தம்மிடம் உள்ள எளிய பொருட்களைக்கொண்டு தம் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதே ராமனின் சிறப்பு.சந்திரசேகர வெங்கட்ராமன் என்று சொல்வதை விட சர் சி.வி.ராமன் என்று சொன்னால்தான் நமக்கெல்லாம் சட்டென்று தெரியும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராஸ் மாகாணமாக இருந்த தற்போது தமிழ்நாட்டின் தமிழ் பிராமண பெற்றோர்களான சந்திரசேகர ராமநாதன் ஐயர் மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோருக்குத் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலில்1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை சந்திரசேகர் விசாகப்பட்டினத்தில்

கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் ராமன் பள்ளிப் படிப்பை அங்கேயே படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவர் 1904ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பைச் சிறப்புத்தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலைப் பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலேயே தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலைப் பட்டப்படிப்புத் தேர்வில் எல்லாப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறைத் தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறைத் தலைமை அலுவலராகப் பணியில் சேர்ந்தார்.
பணியில் இருக்கும்போதே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் குறித்து ஆய்வுகள் நடத்திவந்தார். அதன் பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றினார். அதன் பின் இராமன் ஆய்வுக்கழகத்தை நிறுவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இவர் 1921 செப்டம்பரில் எஸ்.எஸ். நர்குண்டா கப்பலில் இங்கிலாந்தில் இருந்து ஒரு பயணத்தின்போது , ​​அவர் மத்தியதரைக் கடலின் நீலநிறத்தைப் பற்றிச் சிந்தித்தார். கடலின் நிறம் ஏன் நீலமாக உள்ளது? கப்பலில் பயணித்த இந்திய விஞ்ஞானி வெங்கடராமனுக்கு எழுந்த கேள்வி இது. இதுகுறித்து அவர் இடைவிடாத ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். பலவிதமான திரவங்கள் வழியாக ஒளியைப் பாய்ச்சி மூன்றாண்டுகள் அவர் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில், அவர் வெளியிட்டதே ‘ராமன் விளைவு’என்ற கண்டுபிடிப்பு. இராமன் விளைவு என்னும் அறிவியல் கருத்தாக்கத்திற்காக 1930ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அது என்ன ராமன் விளைவு? ஒரு பொருளின் மீது ஒளிக்கதிர்கள் விழும்போது, ​​ஒளி சிதறுகிறது. அதாவது ஒளிக்கதிர்களில் உள்ள ஃபோட்டான் துகள்கள் திரவப் பொருட்களின் அணுக்கள் மீது விழுந்து சிதறுகின்றன. இந்த ஃபோட்டான்களில் சில அதிக அதிர்வெண்ணிலும் மற்றவை குறைந்த அதிர்வெண்ணிலும் சிதறுகின்றன. அதாவது, ஒளியின் ஒரு பகுதி வேறுபட்ட அதிர்வெண்ணுடன் சிதறடிக்கப்படுகிறது. ஒரு பொருளின் மீது ஒளி விழுந்தால் அது சிதறிவிடும்… அதன் காரணமாக அது தன் போக்கை மாற்றிவிடும் என்பதை ராமன் தனது கோட்பாடுகள் மூலம் நிரூபித்தார்.

எடுத்துக்காட்டாகக் கடல்நீரில் சூரிய ஒளி படும்போது அந்த ஒளியில் உள்ள நீலநிறம் அதிகமாகச் சிதறி நம் கண்களை வந்தடைகிறது என்று சி.வி.ராமன் கண்டுபிடித்தார். சூரியஒளி வெவ்வேறு வண்ணங்களில் பிரதிபலிக்கிறது. ஆனால், அவற்றில் நீலக் கதிர்கள் ஆழமாக ஊடுருவி பிரதிபலிக்கின்றன. அதனால் கடல் நீலமாகத் தோன்றுகிறது என்பதை அவரது ஆய்வு எடுத்துக் கூறியது.பொருட்களின் மீது படும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு சிதறிக்கிடக்கின்றன என்பதைக் காட்டும் ஆராய்ச்சியின் முடிவு ‘ராமன் விளைவு’ எனப்படுகிறது. இதன் மூலம், வேதிப் பொருட்களின் அணு மற்றும் மூலக்கூறு கட்டமைப்புகளைக்கொண்டு அவற்றின் பண்புகளை அறிய முடியும். தொழிற்சாலைகளில் உள்ள செயற்கை வேதிக்கலவைகள், ஜவுளி சாயங்கள் மற்றும் மருத்துவத் துறையில் தேவைப்படும் மருந்துகளின் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் ஒரு பொருளின் மீது ஒளிக்கற்றை விழுந்தால், அது சிதறுகிறது என்பதை முதன்முறையாக சோதனை மூலம் நிரூபித்தார் சர்.சி.வி.ராமன். இதுவே ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இதனால் ‘இந்திய நவீன அறிவியலின் தந்தை’என்று வெங்கட்ராமன் போற்றப்படுகிறார். அன்றைய நாள்தான் தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சி.வி.இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் தொடங்கி அதன் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் பெங்களூரில் நடப்பு அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பணிபுரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயின்ஸ் என்னும் ஓர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

இவருக்கு லண்டனில் சிறப்புப்பேராளர் என்ற பெருமை 1924ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பிரிட்டன் அரசு இவருக்கு 1929ஆம் ஆண்டில் வீரத்திருத்தகை எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929ல்ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசியரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது. இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான ‘‘மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது.இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டில் இவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டில் அகில உலக லெனின் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ஏராளமான கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சி.வி.ராமன் ஒளி மட்டுமின்றி ஒலி, நிறங்கள், திரவங்களின் பாகுத்தன்மை, தாதுக்கள், வைரம், படிகம் போன்றவற்றிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ராமனின் ஆய்வுக் கட்டுரைகள் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் சேகரிக்கப்பட்டு பதுகாக்கப்படுகின்றன. இத்தகைய பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சர்.சி.ராமன் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம், நாள் மறைந்தார் அவர் மறைந்தாலும் அவர் கண்டுபிடிப்புகள் அறிவியல் துறைக்கு வளம் சேர்த்துக்கொண்டுள்ளன.

 

The post முதல் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் appeared first on Dinakaran.

Read Entire Article