நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பாரம்பரிய நடனமான பரதக்கலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்று சிறந்து விளங்கி வருகிறார் சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த டாக்டர். பத்மா கணேஷ். பரதக்கலையில் இருபது வருட அனுபவத்தில் பல்வேறு மேடைகளில் ஆடியும், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியும், கலந்துகொண்டும் வருகிறார் நடனக்கலைஞர் டாக்டர் பத்மா கணேஷ். நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா கணேஷ் பரதக்கலை குறித்து தனது இருபது வருட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். எங்கள் குடும்பத்தில் யாருமே கலைத்துறையில் இல்லை. நான்தான் முதல் தலைமுறை பரதக்கலைஞர் என்பதில் பெருமகிழ்ச்சிதான் எனக்கும். பரதக்கலையில் சிறு வயதிலிருந்தே ஒரு தனித்த ஈடுபாடு இருந்தது. நான் பரதக்கலை பயில எனது தந்தையார் மிகுந்த ஊக்கம் அளித்தார். எனது எட்டாவது வயது முதல் பரதக்கலையைப் பயின்றுவருகிறேன். என் முதல் குரு சபாபதி ஐயர். அதன்பிறகு சுவாமிநாதன் என்பவரிடம் பரதம் கற்றுக்கொண்டேன். நான் எம்எஸ்ஸி கணிதம் பயின்ற முதுகலைப்பட்டதாரி. அதன்பிறகு பரதக்கலையில் மாஸ்டர் டிப்ளமோ இன் பரதநாட்டியம் பயின்று, அதன்பிறகு அதில் முனைவர் பட்டமும் பெற்றேன். காலேஜ் முடித்ததும் இந்தி ஆசிரியராக பணியிலும் , ஒரு எம்என்சி நிறுவனத்தில் பணியிலும் இருந்தேன். எனக்கு 26 வது வயதில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு குழந்தை. பிறகு இரண்டரை வருடம் கழித்து என்னுடைய 29 வது வயதில்தான் அரங்கேற்றம் நடைபெற்றது. திருமணத்திற்குப்பிறகு கொஞ்சகாலம் மட்டுமே இடைவெளி விட்டிருந்தேன். எனது 30 வது வயதுக்கு மேல் பரதநாட்டியமே முழு நேரப்பணியாக மாற்றியமைத்துக் கொண்டேன். தற்போது அம்பத்தூரில் உள்ள எனது ஜெயசாய் நிருத்தியாலயாவில் பல்வேறு குழந்தைகளுக்கு பாரம்பரியமான நமது பரதக்கலையை 18 வருடங்களாகக் கற்பித்துவருகிறேன்.
உங்கள் மாணவிகள் குறித்து..
தற்போது எனது மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகள், நாட்டியாஞ்சலி விழாக்களில் நடன நிகழ்ச்சிகளை ஆடிவருகின்றனர். அதில் சில மாணவிகளுக்கு சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் நடத்தி வைத்துள்ளேன். இன்றைய மிகுந்த தலைமுறையினர் ஆர்வத்துடன் பக்தியுடனும் இக்கலையைக்கற்றுவருகின்றனர். எங்கள் பகுதியை சுற்றியுள்ள நிறைய ஏழை மாணவிகள் இக்கலையை கற்க ஆர்வமுடன் வருகின்றனர். நான் பரதக்கலையை தொழிலாக நினைக்கவில்லை. அதை ஒரு சேவையாக நினைக்கிறேன். அதனால் மிக குறைந்த செலவில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. எவ்வளவு இலகுவாக இக்கலையை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க வேண்டுமோ அப்படி நினைத்து செயல்பட்டு வருகிறேன். எனது மாணவிகளை வைத்து கின்னஸ் சாதனைக்காக ஆடியுள்ளேன். நிறைய சிவன் கோவில்கள் மற்றும் நடராஜர்கோவில்களிலும் ஆடியது மறக்க இயலாத அனுபவங்கள்தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணித்து நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சிதம்பரம், குருவாயூர், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் நிறைய நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம்.வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
விருதுகள் மற்றும் பாராட்டுகள்…
இதுவரை 15 க்கும் மேற்பட்ட விருதுகளை நாட்டியக்கலைக்காகப் பெற்றது மகிழ்வான விஷயம். மேலும் ஆடல் தென்றல், லயச்சுடரொளி என்கிற பட்டங்கள் கிடைத்தது. நாங்கள் 2017 மற்றும் 2019 என இரண்டு முறை கின்னஸ் உலக சாதனைக்காக ஆடியுள்ளோம். பரத மழை 5050 என்கிற நிகழ்ச்சிக்காக 5050 பேருடன் பரதம் ஆடி உலக சாதனைகள் படைத்தோம்.
குடும்பம் குறித்து….
என் கணவர் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இரண்டு பெண்களும் பரதக்கலையை முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர்கள். எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்புதான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. முதல் மகள் சாப்ட்வேர் துறையில் இருக்கிறார். இரண்டாவது மகள் பள்ளியில் பயின்று வருகிறார். எனது மகள்கள் வேறு துறையில் இருந்தாலும் பரதக்கலையில் மிகுந்த ஈடுபாடு காட்டிவருகிறார்கள்.
பரதக்கலையில் உங்கள் எதிர்காலப்பணி….
இந்தக்கலையை அனைவருக்கும் கெண்டு சேர்க்க வேண்டும். எனது நாட்டியப் பள்ளியைப் பெரிதும் விரிவுபடுத்த வேண்டும். அதில் நிறைய பிள்ளைகளுக்கு குறைந்த கட்டணத்தில் பரதக்கலையை சொல்லித்தர வேண்டும். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சொல்லித்தர வேண்டும் என்கிற ஆசைகள் அதிகம் உள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான் ஒற்றை ஆளாக இருபது வருடங்களாக எப்படியோ சமாளித்து வருகிறேன். அடுத்த கட்ட வெற்றிகளுக்காகக் கடுமையாக போராடியும் வருகிறேன். பரதக்கலை நமது பாரம்பரியக் கலைகளில் மிக முக்கியமான ஒன்று. அதனை அடுத்த தலைமுறைக்கு சிறப்பான வழியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை என்கிறார் நாட்டியக் கலைஞர் டாக்டர். பத்மா கணேஷ்.
– தனுஜா ஜெயராமன்
The post முதல் தலைமுறைக் கலைஞராக கெத்துக் காட்டும் டாக்டர் பத்மா கணேஷ்..! appeared first on Dinakaran.