முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

3 months ago 15

மிர்புர்,

தென்ஆப்பிரிக்கா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 106 ரன்னில் அடங்கியது. தென்ஆப்பிரிக்கா 308 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து 202 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. மக்முதுல் ஹசன் ஜாய் (38 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (31 ரன்) களத்தில் இருந்தனர்.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மக்முதுல் ஹசன் ஜாய் 40 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 33 ரன்னிலும் ரபடா வீசிய ஒரே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த லிட்டான் தாஸ் 7 ரன்னில் நடையை கட்டினார்.

இதைத்தொடர்ந்து அறிமுக வீரர் ஜாக்கர் அலி, ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ்சுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததுடன் முன்னிலை பெற வைத்தனர். ஸ்கோர் 250 ரன்னாக உயர்ந்தபோது ஜாக்கர் அலி 58 ரன்னில் (111 பந்து, 7 பவுண்டரி) கேஷவ் மகராஜ் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 7-வது விக்கெட்டுக்கு மெஹிதி ஹசன் -ஜாக்கர் அலி இணை 138 ரன்கள் திரட்டியது. அடுத்து நயீம் ஹசன் களம் இறங்கினார்.

80 ஓவர் முடிவின்போது மழை குறுக்கிட்டதால் சுமார் 1½ நேரம் பாதிப்புக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. வெளிச்சம் குறைவாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டனர். வங்காளதேச அணி 85 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்து இருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. மெஹிதி ஹசன் மிராஸ் 87 ரன்களுடனும், நயீம் ஹசன் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டோனி டி சார்சி 41 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Read Entire Article