கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 348 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 93 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் சோயப் பஷிர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 499 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 151 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் அடித்திருந்தது. டேரில் மிட்செல் 31 ரன்களுடனும், நாதன் சுமித் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 4 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 74.1 ஓவர்களில் 254 ரன்களில் ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல் மட்டும் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராலி 1 ரன்னிலும், பென் டக்கெட் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஜேக்கப் பெத்தேல் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதுடன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. வெறும் 12.4 ஓவர்களிலேயே 104 ரன்கள் அடித்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 50 ரன்களுடனும், ஜோ ரூட் 15 பந்துகளில் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.