முதல் டெஸ்ட்; கே.எல்.ராகுல், பண்ட் சதம்.. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

1 week ago 2

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நின்றனர். இந்த சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 8 ரன்களில் அவுட்டானார்.

இதனையடுத்து கே.எல்.ராகுல் - பண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசி அசத்தினர். சதமடித்த சிறிது நேரத்திலேயே பண்ட் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கருண் நாயர் 20 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 4 ரன்களிலும், சிராஜ் மற்றும் பும்ரா டக் அவுட்டிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக ஆடி கொண்டிருந்த கே.எல்.ராகுலும் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.

96 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 364 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

Read Entire Article