‘‘வசூல் மன்னனை தூக்கி அடிச்சிட்டாங்க போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல வாசி வட்டத்துக்கு உட்பட்ட கீழ் கொடுங்காலூர்ல, சார் பதிவு அலுவலகம் இருக்குது. இங்க பதிவாளராக நாவுக்கே அரசரான ஒருத்தரு பணிபுரிந்து வந்திருக்காரு. இவரு ப வைட்டமின் இல்லாம எந்த வேலையும் செய்றதில்லையாம். ஒரு ஊராட்சிக்கு மயான பாதை அமைக்க தனிநபர் ஒருத்தரு தானமாக இடத்தை கொடுத்திருக்காரு. அதை பதிவு செய்றதுக்கும் வைட்டமின் கேட்டாராம். அப்புறம் வைட்டமின் சேர்ந்த பின்னாடித்தான் பதிவே நடந்ததாம். இப்படி வைட்டமின் அதிகம் வாங்குனதால, புகார்களும் அதிகம் போயிருக்குது. இதனால போன வாரம் டிரான்ஸ்பர் செய்து உத்தரவு வந்துச்சாம். உத்தரவு வந்த நாள்ல மட்டும் அதிகளவுல பதிவு செஞ்சி வைட்டமின் பார்த்துட்டாராம். கொடுத்தா, எந்த தடையும் இல்லாம பதிவு நடக்குமாம். கொடுக்காவிட்டால் தடையில்லாவிட்டாலும் தடை போட்டு கெடுபுடி செஞ்சிருக்காரு. இப்படி ஆட்டம் போட்ட பதிவு அலுவலரு டிரான்ஸ்பர் ஆனதால, அங்க இருக்குற ரைட்டர்ஸ் ஸ்வீட்டு எடுத்து கொண்டாடுனாங்களாம். இந்த கொண்டாட்டம் தான் அந்த ஏரியாவுல பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமி ரகசிய கூட்டத்தை புறக்கணித்துவிட்டார்களாமே முக்கிய எம்எல்ஏக்கள்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் புல்லட்சாமி தலைமையிலான அரசு நடைபெற்று வரும் நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒன்றிய ஆட்சி அதிகார மைய கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முடுக்கி விடப்பட்டது. அது எதிர்பார்த்த பலனை தராத நிலையில் அப்செட்டில் அக்கட்சியினர் வீடுகளில் முடங்கிய நிலையில் இதுவரை கட்சி உறுப்பினர் சேர்க்கையையே நடத்தாத புல்லட்சாமி தரப்பு திடீரென ஆலோசனை கூட்டத்தை நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மாஜி சபையின் நாயகரை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் பின்னணியில் புல்லட்சாமி இருப்பதாக அரசல் புரசலாக தகவல் உலாவும் நிலையில், அக்கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான பணிகளும் வேகமெடுத்துள்ளதால் கூட்டணி கட்சியான ஒன்றிய ஆளும்தரப்பு கட்சி கடும் அப்செட்டில் உள்ளதாம்.
இதுஒருபுறமிருக்க புல்லட்சாமி ஏற்பாடு செய்திருந்த கட்சியின் முன்னணி தரப்பு கூட்டத்தில் சில எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மிஸ்சிங் ஆகியிருந்தது ஆளுங்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். அவசரமாக கூட்டியதால் ஆப்சென்ட் ஆனார்களா அல்லது வேறொரு வளைக்குள் சிக்கியதால் புறக்கணிப்பா என்ற பரபரப்புதான் புதுச்சேரியின் தற்போதைய ஹைலைட்’’ என்றார் விக்கியானந்தா.
வடமாநில நதி பெயர் கொண்ட மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் லஞ்சம் பெறும் அரசு அலுவலர்கள் கதி கலங்கி போயுள்ளனராம். கடந்த சில மாதங்களில் பத்திரப் பதிவுத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினராம். இதில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 3 லட்சத்திற்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டதாம். இதில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உயர் அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இவை தவிர தனி நபராக லஞ்சம் பெற்ற வருவாய்த்துறையினர் சிலரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனராம். தீபாவளி நெருங்கும் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி வேகம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முதல் கண்ணிவெடிக்கு பலியானவருதான் தளவாய்க்காரர் என்கிறார்களே.. உண்மையா..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி என்றால் நான் தான், என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற மன தைரியத்தோடு களம் இறங்கியிருக்காரு அக்கட்சியின் தலைவர். இந்த மன உறுதியை குலைக்கும் வகையில், பிரிந்து போனவர்களை ஒருங்கிணைப்போம் என ஆறு மாஜிக்கள் இலைக்கட்சி தலைவரை சந்தித்து பேசியதெல்லாம் பழைய கதை. ஆனால் அந்த கூட்டணி அமைதியான வேலையில் ஈடுபட்டிருக்காம். ஒவ்வொரு மாவட்ட முக்கிய நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து தங்கள் கருத்துக்கு வலுசேர்த்து வாராங்களாம். கூடிய விரைவில், இந்த ஒற்றை கோரிக்கையை முன்வைத்து இலைக்கட்சி தலைவரை சந்திக்க திட்டமும் போட்டிருக்காங்களாம். அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் டெல்லி உதவியுடன் இலைக்கட்சி தலைவரை நசுக்கிட்டு, கொங்கு ரெண்டாங்கட்ட தலைவரை முன்நிறுத்தும் பிளான் இருக்காம். இதற்கு பலாப்பழக்காரரும் தயாரா இருக்காராம். இந்த நெருக்கடியை உணர்ந்த இலைக்கட்சி தலைவர், ஏதாவது ஒரு அதிரடி மூலமாக தனக்கு எதிரா உருவாகும் அணிக்கு வேட்டு வைக்க திட்டம் தீட்டியிருக்காரு.
இந்த கண்ணி வெடிக்கு முதல் பலியானவரு தளவாயானவராம். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வச்சதை காரணமா காட்டி, அவரது மா.செ.பதவியை பறிச்சிட்டாராம் இலைக்கட்சி தலைவர். இந்த அதிரடியால் இலைக்கட்சிக்குள்ளே சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்காம். அதுவும் இந்த தளவாயானவரு, மக்கள் செல்வாக்கோ, தனிப்பட்ட செல்வாக்கோ கொண்டவரு இல்லையாம். அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவரு, கூவத்தூரில் கிரீடம் சூட்ட இந்த தளவாய்காரருதான் முக்கிய காரணமாம். சின்னமம்மி சிறை கம்பிக்குள் சிக்கியிருந்த நேரத்தில், இலைக்கட்சி தலைவரின் மாங்கனி நிழலானவரும், தளவாயாரும் சேர்ந்து, குக்கர்காரர் மூலமா சின்னமம்மியை டச் பண்ணியிருக்காங்க. நாம சொன்னதை தட்டமாட்டார், என்றென்றும் அடிமையா இருப்பாருன்னு ஊதியிருக்காங்க. இதன்பிறகுதான் இலைக்கட்சி தலைவர் தவண்டுபோய் பதவியை எட்டிப்பிடிச்சாராம். அவ்வளவு முக்கியமான தளவாய்காரரை தூக்க இன்னொரு காரணமும் இருப்பதா தேனீக்காரரின் அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க. தனக்கு நெருக்கமான தளவாய்காரரை தூக்கினால், தனக்கு எதிரான ரெண்டாங்கட்ட தலைவர்கள் பயந்துருவாங்க, அதன்பிறகு மன்னிப்பு கடிதத்தை வாங்கிக்கிட்டு தளவாய்காரரை சேத்திடுவாரு. இதெல்லாம் ஒரு நாடகமுன்னு சொல்றாங்க. அதே நேரத்தில் டெல்லி மற்றும் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால்தான் இந்த அதிரடி நடவடிக்கையை இலைக்கட்சி தலைவர் எடுத்திருப்பதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
The post முதல் கண்ணிவெடிக்கு பலியானவர் தான் தளவாய்க்காரர் என்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.