
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட்டின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 169 ரன்களும், கேப்டன் கிரெய்க் எர்வின் 66 ரன்களும் அடித்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் ஆதிர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 300 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 46 ஓவர்களில் 250 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய ஜிம்பாப்வே தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 44 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிளெஸ்சிங் முசரபானி 4 விக்கெட்டுகளும், ரிச்சர்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.