முதல் ஒருநாள் போட்டி: அயர்லாந்தை எளிதில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி

4 months ago 11

ராஜ்கோட்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 92 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனா மற்றும் பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மந்தனா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 20 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் பிரதிகா ராவலுடன் ஜோடி சேர்ந்த தேஜல் ஹசாப்னிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி கம்பீரமாக பயணிக்க வைத்தனர். சிறப்பாக விளையாடிய பிரதிகா ராவல் 89 ரன்களில் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார்.

வெறும் 34.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 241 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தியா தரப்பில் தேஜல் ஹசாப்னிஸ் 53 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அயர்லாந்து தரப்பில் ஐமி மாகுயர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி வரும் 12-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Read Entire Article