![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36383260-untitled-7.webp)
சென்னை,
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விழுப்புரத்தில் 28.1.2025ல் நடந்த வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் மணி மண்டப திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்" என கூறியுள்ளார்.
நீண்ட கடற்கரையை கொண்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே துவங்கிவிட்டது. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோர் பெரும் பங்களித்துள்ளனர். காமராஜர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட தொழில், பாசனம், கல்வித்துறை கட்டமைப்புகளே இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன. 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த பத்தரை ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியிலும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளே தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இவற்றையெல்லாம் திராவிடத்தில் அடக்கி, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். 'திராவிடம்' என்ற 'நிலப்பரப்பை', திராவிட இனமாக்கி, தமிழ் மண்ணில் பிரிவினை எண்ணத்திற்கு விதைபோட்டவர், மதம் மாற்றுவதற்காக தமிழகம் வந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல். அவரது வழியில் சென்று, 'திராவிடம், திராவிடர், திராவிட மாடல்' எனக்கூறி, 'தமிழ், தமிழர், தமிழ்நாட்டின்' அடையாளத்தை அழிக்கிறது திமுக.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது உலகின் தொன்மையான தமிழ் மொழியை செம்மொழியாக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்டன. 2004-ல் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையாததால் அது சாத்தியமில்லாமல் போனது. அதன்பிறகு அமைந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியில், தமிழுக்கு மட்டுமல்ல, பல்வேறு மாநில மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, உலகின் பல நாடுகளில், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அரங்குகளிலும், உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடு இந்தியா என பேசி, தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
"இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது" என்று கூறுவது, இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட ராஜாஜி, காமராஜர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்ற முதல்-அமைச்சர்களையும், கொங்குமண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் சுய தொழில் தொடங்கி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட தொழில்முனைவோர்களையும் அவமதிக்கும் செயல். அவர்களின் திறமையை, அறிவாற்றலை, பங்களிப்பை, திராவிடம் என போலி சித்தாந்த சிமிழுக்குள் அடைப்பது பெரும் அநீதி.
"திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி" என்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். திராவிட இயக்கம் துவங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், தி.மு.க. கட்சி தலைவராகவோ, தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராகவோ பட்டியலினத்தை சேர்ந்தவரோ, பெண் ஒருவரோ வர முடியவில்லை. ஏன், தி.மு.க. பொதுச்செயலர், துணை முதல்வர் போன்ற பதவிகள்கூட பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கோ, பெண்களுக்கோ இதுவரை கிடைக்கவில்லை. இதுதான் சமூக நீதியை நிலைநாட்டுவதா? எல்லோருக்கும் எல்லாம் என்பதா?
முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசும் திராவிடம் என்பது, 'ஒரே கட்சி, ஒரே குடும்பம், ஒரே ஆட்சி' என்பதுதான். குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு சமூக நீதி பற்றி பேசுவதை இனியும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். 'பேசுவது ஒன்று, செயல் ஒன்று' என ஏமாற்றும் தி.மு.க.வுக்கு உரிய நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.