
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புதிதாக ரூ.353 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து, ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,703 திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து15 ஆயிரத்து 634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் உரையாடி அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.