
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், கடந்த வாரம் திவ்யா, சுதீர் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், சுதீர் திவ்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். மேலும், அவரது செல்போன் எண்ணிற்கு அடிக்கடி சுதீர் தொடர்பு கொண்டு வந்துள்ளார். குறுந்தகவலும் அனுப்பி உள்ளார். இந்தநிலையில், திவ்யாவை சுதீர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், பரங்கிப்பேட்டை பகுதிக்கு வரும்படி சுதீர் அவரிடம் தெரிவித்தார். அங்கு திவ்யா வந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது சுதீர், திவ்யா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபம் அடைந்த சுதீர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திவ்யாவின் உடலில் குத்தினார். இதனால் திவ்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதையடுத்து திவ்யா உயிரிழந்து விட்டதாக கருதி, அவரின் வாடகை வீட்டில் சுதீர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த திவ்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தும்பே கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ட்வால் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் சுதீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.