'முதல்-அமைச்சர் டெல்லி செல்வது மக்களுக்காக அல்ல, கூட்டணிக்காக' - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

6 hours ago 1

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்வது மக்களுக்கு பலன் சேர்ப்பதற்காக அல்ல என தமிழக பா.ஜ.க. முன்னாள் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்... ஏன்? பிரதமர் நரேந்திர மோடி திட்டக் கமிஷனாக இருந்ததை நிதி ஆயோக் ஆக மாற்றியது மத்திய, மாநில அரசுகளின் விவாதங்கள் இருக்க வேண்டும், மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும்தான். நிதி ஆயோக்கின் அடிப்படைத் தன்மையே மாநில அரசுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அமைப்பு என்பதுதான்.

அதுமட்டுமல்ல இந்த நிதி ஆயோக் கூட்டத்தின் மூலம் மாநில அரசுகள் 2047-க்குள் தங்கள் மாநிலத்தை முதன்மை மாநிலங்களாக மாற்றுவதற்கு என்னென்ன அடிப்படை கட்டமைப்பு தேவையோ அதற்கான ரோடு மேப்பை கொடுத்தால் நிதி பகிர்வு ஆலோசிக்கப்படும் என்பதும் இந்த கூட்டத்தின் ஒரு அங்கம். ஆக மு.க.ஸ்டாலின் அரசு நமது மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணித்து இருக்கிறது.

இன்று மாநிலத்தில் உள்ள பல நிதி பிரச்சினைகளுக்கு காரணம் ஜனநாயகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதி பகிர்வு அமைப்பிற்கு தமிழக முதல்-அமைச்சர் செல்லாததுதான் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். தங்களின் அரசியல் லாபத்திற்காக இதற்கு முன்னால் இந்த கூட்டத்திற்கு செல்லாததினால் தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கே அழுத்தமாகவே நான் பதிவிடுகிறேன்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்சிக்குள் கட்சியை புகுத்தி தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது திராவிட முன்னேற்ற கழக அரசு. இதற்கு முன்னால் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு எல்லாம் சரியாக சென்று கலந்திருந்தார்கள் என்றால் தமிழகத்தின் பெரும்பான்மையான பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப் பட்டிருக்கும்.

இன்னொரு மாநிலத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்குவதற்காக எதிர்ப்பு தெரிவித்து நான் புறக்கணிக்கிறேன் என்று சென்ற முறை முதல்-அமைச்சர் சொன்னார். இன்னொரு மாநிலத்திற்கு அதிகமாக கொடுப்பதற்கு புறக்கணிக்கிறேன் என்று சொல்வதை விட எனது மாநிலத்திற்கு அதிகமாக கொடுங்கள் என்று தேவையான ஆவணங்களுடன் அந்த அமைப்பிற்கு சென்று வேண்டுவது தானே சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆக இவர்களின் தவறான அணுகுமுறையால் தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

ஆக முதல்-அமைச்சர் இன்று டெல்லி போவது மக்களுக்கு பலன் சேர்ப்பதற்காக அல்ல. தங்கள் கூட்டணி பலவீனமாக இருப்பதை அறிந்து அதற்கு பலம் சேர்ப்பது தானே தவிர தமிழக மக்களுக்காக செல்லவில்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

Read Entire Article