
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 36 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த தொடர் ஆரம்பித்தபோது ஏப்ரல் 17-ம் தேதி (நேற்றைய ஆட்டம்) மும்பைக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல்.-ல் முதல் அணியாக 300 ரன்கள் அடிக்கும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன டேல் ஸ்டெயின் துணிச்சலாக கணித்திருந்தார்.
ஆனால் அவரது கணிப்பினை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 162 ரன்கள் மட்டுமே அடித்து பொய்யாக்கி உள்ளது.