முதலாவது டெஸ்ட்: இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஏ அபார வெற்றி

2 months ago 12

மெக்கே,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி, அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ 107 ரன்களும், ஆஸ்திரேலியா ஏ 195 ரன்களும் எடுத்தன.

இதனையடுத்து 88 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சாய் சுதர்சன் 103 ரன்னிலும் (200 பந்து, 9 பவுண்டரி), தேவ்தத் படிக்கல் 88 ரன்னிலும் (199 பந்து, 6 பவுண்டரி) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா ஏ 100 ஓவர்களில் 312 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி நேற்றைய ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் அடித்திருந்தது.

இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணிக்கு கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி - வெப்ஸ்டர் இணை சிறப்பாக விளையாடியது. மேற்கொண்டு விக்கெட் விழாமல் அணியை வெற்றி பெற வைத்த இருவரும் அரைசதம் அடித்தனர். முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. நாதன் மெக்ஸ்வீனி 88 ரன்களுடனும், வெப்ஸ்டர் 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Read Entire Article