சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட “முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம் – இறுதி அறிக்கை”, “பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறைகள் குறித்த ஆய்வு” மற்றும் “சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிய ஆய்வு” ஆகிய மூன்று ஆய்வறிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள், இக்குழுவின் செயல்பாடுகள் பற்றியும், ஐந்தாவது திட்டக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில், மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்டு 16.12.2024 அன்று முதலமைச்சர் அவர்களிடம் அளிக்கப்பட்ட கொள்கை வரைவுகள், அரசின் முன்னோடி திட்டங்கள் மீதான மதிப்பீட்டு ஆய்வுகள் மற்றும் இதர ஆய்வுகள் குறித்தும், ஆய்வு முடிவுகளின் விளைவாக, அரசின் முன்னோடித் திட்டங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் அதனால் அடைந்துள்ள பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களான தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டப் பணிகள் பற்றியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
இக்கூட்டத்தில், முதலமைச்சர், மாநிலத்தின் வளர்ச்சி என்பது சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் தமிழ்நாட்டில் பின்தங்கிய வட்டாரங்கள் அனைத்தும் இணையாக வளர்ச்சி அடையும் நோக்குடன் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த நான்கு ஆண்டுகளில் மாநில திட்டக் குழு அளித்துள்ள பல்வேறு ஆய்வறிக்கைகள், கொள்கை வரைவுகள் ஆகியவை அரசு துறைகளால் செயல்படுத்தப்பட்டனவா என்பதையும், அரசு செயலர்களால் தங்கள் துறைகளில் இத்திட்டங்களின் பரிந்துரைகளை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும் இக்குழு கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், சத்துணவு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தோடு மாநில திட்டக் குழு விரைந்து செயல்பட்டு ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை வகுத்து, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, துணை முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், கே. தீனபந்து, (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், திருமதி மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜெ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் ஜி. சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் appeared first on Dinakaran.