துபாய்: 9வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை தொடரில், துபாயில் நேற்று நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அமெலியா கெர் 43, ப்ரூக் ஹாலிடே 38, சூஸி பேட்ஸ் 32 ரன் எடுத்தனர். பின்னர் 159 ரன் இலக்கை துரத்திய தென்ஆப்ரிக்காஅணியில் கேப்டன் லாரா வால்வார்ட் 33, டாஸ்மின் பிரிட்ஸ் 17 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது.
இதனால் 32 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் பவுலிங்கில் அமெலியா கெர் , ரோஸ்மேரி மெய்ர் தலா 3 விக்கெட் எடுத்தனர். அமெலியா கெர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி (15 விக்கெட்,135 ரன்) விருது பெற்றார். தொடரில் அவர் 6 போட்டியில் 15 விக்கெட் எடுத்து, உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்தார். வெற்றிக்கு பின் அவர் கூறுகையில், மகிழ்ச்சியால் எனக்கு வார்த்தையே வரவில்லை. நம்ப முடியாமல் இருக்கிறேன்.
இந்த ஆண்டு நாங்கள் பல கடினமான சூழலை சந்தித்தோம். தற்போது எங்கள் கனவை எட்டி பிடித்திருக்கிறோம். ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. இதன் மூலம் 2வது பந்து வீசுவது சுலபமாக இருந்தது. அணியில் பலரும் வெற்றிக்காக பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். நான் பேட்டிங் செய்யும்போது எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. எனினும் அதை நான் மறைத்துக் கொண்டு பேட்டிங், பந்து வீச்சில் ஈடுபட்டேன். நான் வீசிய முதல் பந்தில் என்னால் முடியாமல் வலியால் துடித்தேன். ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு கோப்பையை வெல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக போராடினேன். இது போன்ற பெரிய போட்டிகளில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றியை என்னால் மறக்க முடியாது, என்றார். ஐசிசி உலக கோப்பை தொடரில் முதன் முறையாக நியூசிலாந்து அணி பட்டம் வென்றுள்ளதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு ரூ.19.50 கோடியும், தென்ஆப்ரிக்காவுக்கு ரூ.9.75 கோடியும் பரிசு வழங்கப்பட்டது.
தென்ஆப்ரிக்காவின் சோகம் தொடருது…
ஐசிசி உலக கோப்பை தொடர்களில் தென்ஆப்ரிக்கா அணி ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் இதுவரை கோப்பையை வென்றதில்லை. பலமுறை பைனலில் ஆடியபோதிலும் சாம்பியன் மகுடம் கைகூடவில்லை. மகளிர் டி.20 உலக கோப்பையில் கடந்த முறை ஆஸி.யிடம் வீழ்ந்த தெ.ஆப்ரிக்கா இந்த முறை நியூசிலாந்துடன் தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஜூன்மாதம் நடந்த ஆடவர் டி.20 உலக கோப்பை பைனலிலும் தென்ஆப்ரிக்கா , இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பைனல் சோகம் தென்ஆப்ரிக்காவுக்கு தொடர்கிறது.
The post முதன்முறையாக உலக கோப்பை வென்ற நியூசிலாந்து; மகிழ்ச்சியால் எனக்கு வார்த்தையே வரவில்லை: ஆட்ட, தொடர் நாயகி அமெலியா கெர் பேட்டி appeared first on Dinakaran.