புதுடெல்லி: ‘லவ் ஜிகாத் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?’ என நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் கேட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “இந்தியாவை சீர்குலைக்க பல சதி திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சாதி, மொழி, மாகாண அடிப்படையில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகள் தேச நலனை விட பெரியதாகி விட்டது.
மாற்று அரசியல் என்ற பெயரில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நின்று அழிவை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜயதசமி அன்று மோகன் பகவத் ஒரு நல்ல கருத்தை கூறியுள்ளார். இந்நாட்டில் கடவுள்கள் பிரிந்துள்ளனர், புனிதர்கள் பிரிந்துள்ளனர். இது நடக்க கூடாது. இது வெவ்வேறு மதங்கள், மொழிகளை உள்ளடக்கிய நாடு என்று மோகன் பகவத் சொன்னதை வரவேற்கிறேன். ஆனால் 2014க்கு பிறகு சமூகத்தில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. சிறுபான்மையினரை குறி வைத்து புல்டோசர்கள் செயல்படுகின்றன.
லவ் ஜிகாத், வெள்ள ஜிகாத் பேசப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது ஆர்எஸ்எஸ் ஏன் கேள்வி எழுப்புவதில்லை. மக்களின் குடியுரிமை மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதுபற்றி சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வௌியாகின்றன. அப்போது ஆர்எஸ்எஸ் ஏன் கேள்வி கேட்கவில்லை? உங்களின் பேச்சுக்கும், இந்துத்துவா அமைப்பின் ஆதரவை அனுபவிக்கும் பாஜ அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. உங்கள் கருத்துக்கு எதிராக செயல்படும் அரசுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவளிப்பது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
The post முக்கிய பிரச்னைகளில் ஆர்எஸ்எஸ் கேள்வி எழுப்புவதில்லை ஏன்? கபில் சிபல் கேள்வி appeared first on Dinakaran.