மீனராசி குழந்தைகள், குழந்தைகள் அல்ல பெரியவர்கள். அவர்களைக் குழந்தைகள் போல நடத்தக் கூடாது. அவர்களுக்கு இதைச் சாப்பிடு, இதை உடுத்து இதைப் படி என்று சொல்வது பிடிக்காது. இந்த உணவு உடம்புக்கு நல்லது இந்த உடை நெட்டையாக இருப்பவருக்கு நல்லது குட்டையாக இருப்பவருக்கு ஒல்லியாக இருப்பவருக்கு அழகாக இருக்கும், இன்னின்ன படிப்புகள் நல்ல வேலை வாய்ப்புக்கு உதவும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்று பொதுவாகப் பெரியவர்கள் பேசிக் கொண்டால் போதும். பெரியவர்களோடு இருக்க விரும்பும் மீனராசி குழந்தைகள், அவற்றைக் காதில் வாங்கி மூளையில் ஏற்றி அலசி ஆராய்ந்து தங்களுக்குரிய உணவு, உடை, படிப்பு போன்றவற்றைத் தாமே தெரிவு செய்வர்.
சரியான பாதையும் பயணமும்
மீனராசி குழந்தைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது கடினமானது. இவர்கள் போக்குக்கு விட்டுவிட வேண்டும். இவர்கள் போகும் பாதை சரியான பாதையாகத் தான் இருக்கும். பெரியவர்கள் காட்டும் பாதையைவிட மீனராசி குழந்தை செல்லும் பாதை நன்மையும் சிறப்பும் நிரம்பிய பாதையாகதான்இருக்கும்.
பக்குவமும் முதிர்ச்சியும்
மீன ராசி குழந்தைகள், சிறுவர் தோற்றத்தில் இருக்கும் பெரியவர்கள். இவர்கள் மிகுந்த மனப்பக்குவமும் மனமுதிர்ச்சியும் உடையவர்கள். இவர்களைக் குழந்தைகள் போல நடத்தக் கூடாது. இவர்களுக்கென்று ஒரு `டைம் டேபிள்’ போட்டுக் கொடுத்து ஆறு மணிக்கு எழுந்திரு, ஏழு மணிக்குச் சாப்பிடு, எட்டு மணிக்குக் கிளம்பு என்று சொல்வது இவர்களுடைய மனதில் மிகுந்த குழப்பத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தி காலதாமதத்தையும் ஏற்படுத்தும். இவர்கள் சற்று நிதானமானவர்கள் என்பதால் இவர்களை அவசரப்படுத்தினால் எல்லா செயல்களுமே கெட்டுப் போய்விடும் அல்லது குழப்பமாகிவிடும். இவர்களால் நிதானமாகச் சிந்தித்து செயல்பட முடியாத மன அழுத்தத்தை உருவாக்கிவிடும். இவர்களைச் சுதந்திரமாக விட்டுவிட்டால் இவர்களே சரியான நேரத்தில் எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டுபள்ளிக்கு கிளம்பி விடுவார்கள்.
சுய சிந்தனையும் நுண்ணறிவும்
மீன ராசி குழந்தைகள் நுண்ணறிவு மிக்கவர்கள். ஆழமாக சிந்தித்து ஆராயக் கூடியவர்கள். இவர்கள் எடுப்பார் கைப்பிள்ளை கிடையாது. சொன்னதை மட்டும் சொல்லும் கிளிப்பிள்ளைகள் கிடையாது. நீங்கள் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் சுயமாக சிந்தித்துத் தான் விரும்பும் முறையில் தான் திருப்பிச் சொல்வார்கள். அவர்களின் கணக்கும் வழக்கம் சரியாகத்தான் இருக்கும்.
ஞானக்குழந்தை
மீனராசி குழந்தைகள் இனிமையாகப் பேசக் கூடியவர்கள். கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. இவர்கள் எப்போதும் பெரியவர்களோடு இருப்பதால் பெரியவர்கள் சொல்லும் கதைகளின் தத்துவங்களையும் ரகசியங்களையும் உள்ளார்ந்த அர்த்தத்தையும் அதிகம் கேட்டு, தங்கள் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருப்பார்கள். தேவைப்படும் நேரங்களில் அவை இவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுதலாக அமையும். எனவே இவர்கள் மற்றவர்களுக்கு குருநாதராக அமைந்து வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய ஆன்மிகவாதிகள்.
கதை சொல்லிகள்
மீன ராசி குழந்தைகள், சிறுவர் களோடு ஓடி ஆடி விளையாடுவதைவிட எங்கேயாவது ஒரு இடத்தில் நிழலில் உட்கார்ந்து கதை சொல்வதையும் கதை கேட்பதையும் அதிகம் விரும்புவார்கள். இவர்கள் சிறந்த கதை சொல்லிகள். இவர்களுக்கு கடவுள் பயம் அதிகம். கடவுள் கதைகள் கேட்பதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகம். குறிப்பாக விடுகதை, புதிர்கள் (puzzles) போன்றவற்றில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். யாரும் விடுவிக்காத சிக்கலான புதிரைக்கூட இவர்கள் விடுவித்து விடுவார்கள். சொல் விளையாட்டு, கணக்கு விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்.
தூக்கம் பிரதானம்
மீனராசி குழந்தைகளுக்குத் தூக்கம் மிகவும் பிடித்த விஷயம். இவர்களுக்கு ஏதேனும் பிடிக்காத ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அல்லது யாராவது இவர்களை திட்டி ஏசி கடுமையான வார்த்தைகளைச் சொல்லிவிட்டால், உடனே தூங்கப் போய்விடுவார்கள். தூங்கி எழுந்ததும் மனம் தெளிந்துவிடும். திட்டியவர்களைப் பற்றி எவ்வித கோபமோ வருத்தமோ இவர்கள் மனதில் இருக்காது.
பாசப்பறவை
மீனராசி குழந்தைகள் எல்லோரிடமும் அன்பும் பரிவும் பாசமும் கருணையும் நேசமும் கொண்டவர்கள். பெற்றோரைத் தெய்வம் போல மதிப்பார்கள். சுற்றத்தினரிடம் மரியாதை காட்டுவார்கள். நண்பர்களிடம் அன்பு பாராட்டுவார்கள். ஏழை எளியவர் மற்றும்முதியோரிடம் பரிவுடன் பழகுவர்.இனிய பேச்சும் நடத்தையும் மீன ராசி குழந்தைகள் மென்மையானவர்கள், கடுமையாக பேசுகின்றவரிடம் நெருங்க மாட்டார்கள். இனிமையான மரியாதையின் மிக்க மனிதர்களிடம் நண்பர்களிடம் மட்டுமே இவர்கள் நெருங்குவார்கள். மற்றவர்களைப் புறந்தள்ளி விடுவர். நட்பும் சொந்தமும் இச்சிறுவர்களை வேலை ஏவுவதோ அல்லது இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதோ இக்குழந்த்தைகளுக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட உறவினர்களை விட்டு இவர்கள் விலகிவிடுவர்.
சாகச வீரர்கள்
மீன ராசி குழந்தைகள் கற்பனை திறன் மிக்கவர்கள் சிறுவயதிலேயே சாகச வீரர்களின் படங்களை நிறைய பார்ப்பார்கள். படக் கதைகளை வாசிப்பார்கள். சக்திமான், ஸ்பைடர் மேன், பேட்மேன், ஜேம்ஸ் பாண்ட் இவர்களின் கதைகளை படங்களை விரும்புபவர். தங்களுடைய கற்பனையில் தானும் ஒரு சாகசக்காரனாக விண்வெளிக்கும்கடலின் ஆழத்திற்கும் சென்று ஏழு கடல் ஏழுமலை தாண்டி சாகசங்கள் புரிவார்கள். இதனால் சிலர் நல்ல எழுத்தாளர்களாக வர வாய்ப்புண்டு.
தோழியர் சகவாசம்
சாகச விரும்பிகளான மீன ராசி சிறுவர்களுக்கு, துணையாகச் சில தோழிகள் அமைந்துவிட்டால் இருவரும் கற்பனையில் குதிரை ஏறி ஏழு உலகத்தையும் சுற்றி வந்து விடுவார்கள். ராஜா ராணி கதைகளில் மிகுந்த விருப்பம் உள்ளவர்கள் பழமையைத் தேடிப் போவதில் ஆர்வம் உள்ளவர்கள். மீன ராசி கடைசி ராசி என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையைவிட கடந்த காலத்தை பற்றிய சிந்தனை இவர்களுக்கு அதிகம். ஆனாலும் இவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
எழுத்திலும் இசையிலும் ஆர்வம்
மீனராசி குழந்தைகள் கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். எழுத்து, பாட்டு, ஓவியம் போல உட்கார்ந்து செய்யும் கவின் கலைகளில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். கவிதை, பாடல், இசை போன்றவற்றின் ரசிகர்கள். ரசனை வீட்டில் அமைதியாக இருந்து பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம் கேட்டு ரசிப்பார்கள். பழங்கால மியூசியங்களைச் சென்று பார்ப்பதில் ஆர்வம் உடையவர்கள்.
தாத்தா, பாட்டி கதைகள்
மீனராசி குழந்தைகளை குட்டி தாதாக்கள் என்று சொல்வதைவிட குட்டி தாத்தாக்கள் என்று சொல்லலாம். தாத்தா கதை சொல்வது போல இவர்கள் அருமையாகக் கதை சொல்வார்கள். சில நேரம் `கதை’ விடுவார்கள். அது சொந்தக் கதையாக இருக்கும். ஆனால், எவராலும் கண்டுபிடிக்க முடியாது.
பழமை விரும்பி
பெரியவர்கள் மீது அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்ட மீன ராசி குழந்தைகள், தெய்வ பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் பெரியவர்களோடு அமர்ந்து கோயில் குளங்கள் பற்றி அவர்கள் பேசும்போது வியந்து பார்த்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருப்பார்கள். சிறுவயதிலேயே பெரியவர்களோடு கோயில் குளங்களுக்குச் செல்வதில் விருப்பமுள்ளவர்கள்.
முனைவர் செ.ராஜேஸ்வரி
The post மீனராசி குழந்தை ஒரு குட்டி குரு பிரம்மா appeared first on Dinakaran.