டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டு மக்களுக்காக காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது தலைநகர் டாக்காவில் உள்ள முஜிபுர் ரஹ்மானின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஹசீனா, ‘எனது தந்தை முஜிபுர் ரஹ்மானின் நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட வீடு கொளுத்தப்பட்டது குறித்து வேதனை தெரிவித்தார். பாகிஸ்தானிடம் இருந்து 1971ம் ஆண்டு வங்கதேசம் பிரிந்த போது, பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தால் தங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் யாரும் நெருப்பு வைக்கவில்லை’ என்றும் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் புகழ்பெற்ற வங்கதேச எழுத்தாளர் ஹுமாயூன் அகமதுவின் மனைவியான நடிகை மெஹர் அஃப்ரோஸ் ஷான் என்பரை தேசத்துரோக வழக்கில் போலீசார் ைகது செய்துள்ளனர். இதுகுறித்து அஃப்ரோஸ் ஷான் வெளியிட்ட பதிவில், ‘வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் ஆட்சியில், எனது மனைவி தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை, மெஹர் தொடர்ந்து விமர்சித்ததால் அவர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான மெஹர் அஃப்ரோஸ், வங்கதேசத்தின் பிரபலமான நடிகை மட்டுமல்ல; சினிமா இயக்குனராகவும், நடனக் கலைஞராகவும், பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மெஹ்ரின் கைது செய்யப்படும் முன், ஜமால்பூரில் உள்ள அவரது மூதாதையர் வீடு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இந்த வீடு அவரது தந்தை முகமது அலிக்கு சொந்தமானது; அவர் ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகையின் தாய் பேகம் தஹுரா அலி, பெண்களுக்கான தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷேக் ஹசீனாவின் மூதாதையர் சொத்துகள், நடிகை மெஹர் அஃப்ரோஸ் சொத்துகள் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், மெஹர் அஃப்ரோஸ் கைதான விவகாரத்தால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
The post முகமது யூனுஸ் ஆட்சியை விமர்சித்ததால் தேசதுரோக வழக்கில் நடிகை கைது: வங்கதேசத்தில் பதற்றம் appeared first on Dinakaran.