
சென்னை,
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை கவர்னருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களை அரசே நியமிப்பது உள்ளிட்டவற்றை கொண்ட 10 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதில் மீண்டும் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், தமிழக அரசு இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே கவர்னருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தனி அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 8-ந் தேதி வெளியானாலும், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த 11-ந் தேதிதான் தீர்ப்பின் முழுவிவரங்களும் வெளியிடப்பட்டன. அது வெளியானதும் தமிழ்நாடு அரசின் அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் 2 அரசிதழ்களாக வெளியிடப்பட்டன.
அதில், சட்ட மசோதாக்கள் மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளான கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும். சட்டத்தில் துணைவேந்தர் என்பதற்கு பதில் அரசு என்ற வார்த்தை மாற்றி அமைக்கப்பட வேண்டும். துணைவேந்தரை நீக்கம் செய்ய ஐகோர்ட்டு நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் நிலைக்கு குறையாத அரசு அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு பரிந்துரை பெற்று அதன்படி நீக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
அரசிதழ் வெளியானதன் மூலம் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தததோடு, பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் அரசு கூறிய திருத்தங்களும் ஏற்றப்பட்டு விடுகிறது. மேலும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவதோடு, துணைவேந்தர் நியமனம் தொடர்பான வரம்புகளை இனி அரசே வகுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்றி, சட்டமசோதாக்கள் தொடர்பான அரசிதழ்களை தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிலையில், அதே வேகத்தில் அரசிதழில் கூறப்பட்ட விஷயங்களை உறுதிப்படுத்தும் வகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி இருக்கிறது.
அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்கள், உயர்கல்வியை மேம்படுத்துவது மற்றும் திட்டங்களை கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் பெறப்பட உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. மேலும் காலியாக இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனமும் வரும் நாட்களில் வேகம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.