மீனவர்கள் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் : நாகையில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் உரை

7 hours ago 2

நாகை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.3.2025) நாகப்பட்டினம் மாவட்ட அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை.

நீர் வளமும், நில வளமும், கடல் வளமும் சூழ்ந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கு நாகர்கள் என்ற பெயர் வரக் காரணமானது, இந்த நாகை மாவட்டம்! தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் பிறந்தது, இந்த நாகை மாவட்டம்!

ஒரு பக்கம் சிக்கல் சிங்காரவேலர் கோயில் – மற்றொரு பக்கம் வேளாங்கண்ணி – மற்றொரு பக்கம் நாகூர் தர்கா என்று நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக சமத்துவம் உலவும் மாவட்டம்தான், இந்த நாகை மாவட்டம்!

நேற்று முன்தினம் 72-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய நான் அதற்கடுத்து கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சியே திருக்குவளையில் இருக்கக்கூடிய இந்த நாகை மாவட்டம் தான்! ஏனென்றால், நான் டெல்டாகாரன்.

“உருக்குலையா மங்கையவள் ஒளிமுகத்தை முத்தமிட கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை” என்ற அந்த அழகிய திருக்குவளை தந்திட்ட புதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர். முதல்வராக, தமிழினத் தலைவராக தனது உழைப்பால் உயர்ந்தார்! சூரியனாய்ப் பிறந்தார்! சூரியனாய் வாழ்ந்தார்! சூரியனாய் வலம் வந்தார்! சூரியனாய் ஒளி தந்தார்! இன்றும் அவருடைய ஒளியில் நம்மை நடைபோட வைத்துக் கொண்டிருக்கிறார்!

அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் பிறந்த நாகை மாவட்டத்திற்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை சிலவற்றை சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 24 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் 42 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 33 உட்கட்டமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

334.82 கி.மீ நீளமுள்ள சாலைகள் 161 கோடியே 31 லட்ச ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நகர்ப்புற பகுதிகளில், 79.89 கி.மீ நீளமுள்ள சாலைகள் 36 கோடியே 96 இலட்ச ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 74.08 கி.மீ நீளமுள்ள சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

14 பாலங்கள் கட்டும் பணிகள் 132 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 13 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

194 திருக்கோயில்களில், 70 கோடியே 11 இலட்சம் ரூபாய் அளவில் 668 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.

80 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

55 மருத்துவக் கட்டமைப்புகள் செய்து தரப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்றால், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை சொல்ல வேண்டும் என்றால், நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

நெடுஞ்சாலைத் துறையின் கீழ், 182.55 கி.மீ நீளமுள்ள சாலை பணிகள் 252 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஆயிரத்தி 782 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நடைபெற்று வருகிறது!

வேதாரண்யம் – அவ்வையார் விஸ்வநாத சுவாமி திருக்கோயில் திருப்பணிகளை 18 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப் போகிறோம்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது!

ஆற்காட்டுத் துறையில் 150 கோடி ரூபாயிலும்,

வெள்ளப்பள்ளத்தில், நூறு கோடி ரூபாயிலும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது!

சாமந்தான்பேட்டையில், சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. நாகை மாவட்டத்துக்கு மட்டுமே இவ்வளவு திட்டங்கள் செய்து தரப்பட்டிருக்கிறது என்றால், தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று தயவுசெய்து எண்ணிப் பாருங்கள்.

அடுத்து, நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில் நாகை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை மட்டும் சொல்கிறேன், 1 இலட்சத்து 32 ஆயிரத்து 162 மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல,

புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்லூரியில் படிக்கக்கூடிய 7 ஆயிரத்து 469 மாணவிகள் அதைப் பெற்று பயனடைகிறார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக 5 ஆயிரத்து 614 மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்து 824 மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

26 ஆயிரத்து 101 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆயிரத்து 308 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

561 பெண்களுக்கு திருமண கடனுதவி தரப்பட்டிருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2 இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், 3 ஆயிரத்து 695 நபர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

46 ஆயிரத்து 913 பேர் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.

17 ஆயிரத்து 767 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதி உதவி தரப்பட்டிருக்கிறது.

18 ஆயிரத்து 332 குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். 31 ஆயிரத்து 953 பேருக்கு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 17 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 53 கோடியே 67 லட்ச ரூபாய் அளவிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில், ஏற்கெனவே வழங்கப்பட்ட நான்காயிரம் ரூபாய் நிதியுதவி, எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

– இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து நம்முடைய திராவிட மாடல் அரசு நன்மையை செய்து கொண்டிருக்கிறது!

இத்தனை நன்மைகளை செய்வதுடன், இது போன்ற மிகப்பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் உங்களை பார்க்கும்போது, மேலும் சில அறிவிப்புகளை வெளியிடவேண்டும். அதையெல்லாம் விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு.

அந்த வகையில், இந்த நாகை மாவட்டத்திற்கான ஆறு முக்கிய அறிவிப்புகளை இப்போது நான் வெளியிடுகிறேன்.

முதல் அறிவிப்பு – வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் இருக்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையில், தென்னடார் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில், புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்! காவிரி டெல்டா பகுதியில், அனுமதிக்கத் தகுந்த வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு – விழுந்தமாவடி, வானவன்மகாதேவி மற்றும் காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு – தெற்குப் பொய்கைநல்லூரிலும் – கோடியக்கரையிலேயும் – தலா 8 கோடியே 50 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில், மூன்று தளங்கள் கொண்ட பல்நோக்குப் பேரிடர் மையங்கள் கட்டப்படும்!

நான்காவது அறிவிப்பு – நாகப்பட்டினம் நகராட்சியின் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகராட்சி கட்டடம் 4 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு – நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் வட்டங்களில் இருக்கின்ற பல்வேறு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களின் மதகுகளும், இயக்கு அணைகளும் 32 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும்!

ஆறாவது அறிவிப்பு – உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல், பல மதங்களைச் சேர்ந்த மக்களும் வருகை தருகின்ற நாகூர் தர்கா, இந்த நாகை மாவட்டத்தில்தான் இருக்கிறது. இங்கே இருந்து இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு செய்தியை ஆறாவது அறிவிப்பாக வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக – சென்னை விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும்!

மீனவர்கள் நிறைந்த நம்முடைய மாவட்டத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்று கேட்டீர்கள் என்றால், இலங்கை கடற்படையால் நம்முடைய மீனவர்கள் கைது செய்யப்படுவதுதான். கடந்த 22-ஆம் நாள், இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களுடைய ஐந்து மீன் பிடி படகுகளையும் இலங்கை கடற்படை 23-ஆம் நாள் கைது செய்தார்கள்.

உடனடியாக, இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கடந்த மாதம் 18-ஆம் நாள் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்னை கோட்டையில் சந்தித்து இது பற்றிப் பேசினார்கள்.

அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டது என்னவென்றால்… “மீனவர்களை கைது செய்தார்கள். கடற்படை ரோந்து படகை, மீனவர் படகு மீது மோதவிட்டு மூழ்கடித்தார்கள். வலைகளை நாசப்படுத்தினார்கள். பிடித்து வைத்திருக்கின்ற மீன்கள் திருடப்படுகிறது. இதையெல்லாம் கேட்பார் இல்லாமல் நடக்கிறது” என்று தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல, அண்மைக் காலத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும்போது, பெரும் தொகையை இலங்கை நீதிமன்றங்கள் அபராதமாக விதிப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் விசைப் படகுகளை ஏலம் விடுகின்ற இலங்கை அரசு, இப்போது அவர்களை விடுதலை செய்யும்போது அபராதமும் விதிக்கின்றது.

தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக வேதனையுடன் சொன்னார்கள்.

பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்ற கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இது வரையிலான இந்த ஒன்றிய அரசின் பத்தாண்டுகளில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மூவாயிரத்து 656 பேர்! அதில் இந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 860 பேர்!

மொத்தம் 611 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் 116 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, நவம்பர் 22-ஆம் தேதி வரை, இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். நான் சொல்லவில்லை. இலங்கையில் என்ன பிரச்சனை என்பதை தெளிவாகவும், என்னென்ன பாதிப்பு என்பதையும், ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய இணை அமைச்சர் அறிக்கையை ஆதாரத்துடன் தாக்கல் செய்திருக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு, ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது! ஆனால், செய்கிறார்களா? இல்லை.

2010-ஆம் ஆண்டு முதல் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தைகள், இப்போது நடப்பதில்லை. 2016-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவர் இடையே, அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகிறது!

இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தால் கொடுமைகள் அரங்கேறுகிறது! இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஜெய்சங்கர் அவர்கள் என்ன சொல்கிறார்? “இந்திய அரசின் தரப்பில், வெளியுறவுத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில், நான்கு பேரும் இணைந்து, ஒரு குழு அமைத்து, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறோம்” என்று சொன்னாரே தவிர, ஆனால், இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை!

அதற்கு முதலில், தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்கவேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே, இதில் நீங்கள் தான் நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் – கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது! இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!

நம்முடைய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில், உறுதியான நடவடிக்கையை நீங்கள் எடுக்கவேண்டும். மிகக் கொடூரமான விதிமுறைகள், தண்டனைகள் அடங்கியுள்ள 2018-ஆம் ஆண்டு சட்டத்தை இலங்கை அரசு முதலில் நீக்கவேண்டும்!

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நீங்கள் பேசவேண்டும்! மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் வழங்க வேண்டும்!

மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிக்கக்கூடிய அந்த கொடுமையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்!

கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டில் மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி ஒவ்வொரு விவகாரத்திலும், நாம் நம்முடைய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி முறையாக வருவதில்லை.

* இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கூட, நிவாரண நிதியை முழுமையாக தருவது கிடையாது.

* ஏன், இப்போது பள்ளி மாணவ – மாணவியர் படிப்புக்காக தர வேண்டிய நிதியைக் கூட தருவதில்லை!

* இந்த நிதியை தரவேண்டும் என்றால், என்ன சொல்கிறார்கள் – மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு நிபந்தனை போடுகிறார்கள்!

இந்த ஒன்றிய அரசு ஏன் செய்தது தெரியுமா? தமிழ்நாடு இந்தளவுக்கு முன்னேறியிருப்பதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒன்றிய அரசின் அனைத்து புள்ளிவிவரங்களிலும், முன்னணியில் இருக்கிறோமே… அது தெரியாதா அவர்களுக்கு? நன்றாக தெரியும்! தெரிந்தும் ஏன் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழின் தனித்துவம் சிலருடைய கண்களை உறுத்துகிறது. அதனால் இப்படி செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் நம்முடைய தமிழர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில், பெரிய பெரிய வேலைகளில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், ஆங்கிலம் கற்றுக்கொண்டது! அந்த இடத்தில், இந்தியை கற்றுக் கொண்டிருந்தால், நம்மால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா? முடியவே முடியாது.

நம்முடைய தாய்மொழி தமிழ்! உலகத்துடன் பேச ஆங்கிலம்!

வாழ்க்கையில் முன்னேற அறிவியல் – தொழில்நுட்பம் – கணிதம் – சமூக அறிவியல் போன்ற படிப்புகள்! இதுதான் நம்முடைய வெற்றியின் அடிப்படை! நான் இன்னும் வெளிப்படையாகவே சொல்கிறேன். இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால், சிலருடைய சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான்!

இதை உணர்ந்த காரணத்தால்தான் இந்தித் திணிப்புக்கு எதிரான நம்முடைய உரிமைக்குரலுக்கு இப்போது, வட மாநிலங்களில் இருந்தும் – ஆதரவுக் குரல்கள் வருகிறது! இந்த சதியை பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு உணர்ந்துவிட்டது. அந்தச் சதியின் தொடர்ச்சியாகதான், இப்போது நடக்கின்ற மிரட்டல்கள் என்று இளைய தலைமுறையினரும் – ஏன், தமிழ்நாட்டுக் குழந்தைகள்கூட உணர்ந்திருக்கிறார்கள்.

செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடலூரைச் சேர்ந்த சிறுமி, நன்முகை! “ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்றால் என்ன? நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான பத்தாயிரம் ரூபாயை காசோலையாக எனக்கு அனுப்பி வைத்தார்! தன்னுடைய தாத்தாவும், பாட்டியும் தமிழாசிரியர்கள் என்று குறிப்பிட்டு, ‘தமிழ் வாழ்க’ என்று தமிழ் உணர்வை – வீடியோவாக அந்தக் குழந்தை வெளிட்டதைப் பார்த்து நான் கண் கலங்கிவிட்டேன்… உடைந்து போய்விட்டேன்.

அதேபோல, இன்னும் பல பிஞ்சு உள்ளங்கள் நிதி வழங்கியபோது, அவர்களுடைய உணர்வும் – உறுதியும் என்னை நெகிழ வைத்தது. ஆனால், என்னால் மகிழ்ச்சியடைய முடியவில்லை! இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு இருக்கின்ற உணர்வு கூட ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்று வேதனை தான் நான் அடைந்தேன்! பிஞ்சுக் குழந்தைகளுக்குகூட ஒன்றிய அரசின் சதி புரிந்திருக்கிறது. இதுதான், தமிழ்நாடு! இதுதான், தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வு!

இந்த தமிழ்நாட்டிற்காக உழைக்கத்தான், உரிமைகள் பெற்றுத் தரத்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்வு இருக்கிறது. போராடி பெற்ற நம்முடைய உரிமைகளை கூட எப்படியெல்லாம் பறிக்கலாம் என்று நினைப்பவர்களாக இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு, நம்முடைய குரலை நசுக்குகின்ற ஆபத்தாக, தொகுதி மறுசீரமைப்பு வர போகின்றது!

அதனால்தான் முன்னெச்சரிக்கை உணர்வுடன், அதற்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறோம்.
“பிஞ்சு உள்ளங்களிடம் இருக்கும் உணர்வு கூட, ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இல்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நாளை மறுநாள், இது சம்பந்தமாக தமிழ்நாட்டின் உணர்வை, ஒற்றுமையாக ஒருமித்த குரலில் எழுப்பவேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு அனுப்பியிருக்கிறோம். பலரும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு சிலர் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த மேடையில் நின்று, மக்கள் முன்பு நின்று, உங்கள் எல்லோருக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். தயவுசெய்து, அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வையுங்கள். இது தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினை. சுயநலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைத்து விடாதீர்கள். உங்கள் முடிவை மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்யுங்கள். நல்ல முடிவை எடுங்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வாருங்கள். “எல்லோருக்கும் எல்லாம்” என்ற ஆட்சிப் பாதையில், மகிழ்ச்சியான – மலர்ச்சியான – வளர்ச்சியான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

இந்தியாவின் முதன்மை மாநிலமாக வெற்றி நடைபோடுவோம்! அதற்கு எந்த இடர் வந்தாலும், யார் தடை போட்டாலும், அதை வென்று இந்த தமிழ்நாட்டை, மக்களான உங்கள் துணையுடன் இந்த முத்துவேல் கலைஞர் ஸ்டாலின் காப்பாற்றுவான்.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

The post மீனவர்கள் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் : நாகையில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Read Entire Article