மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

17 hours ago 2

சென்னை,

ராமேசுவரம் மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது. 2025-ம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் ஆகும்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளதையும், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article