
சென்னை,
ஆர்.கே.பேட்டை அருகே ஸ்ரீ கிருஷ்ணாபுரம் என்கிற மூரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை வெற்றிவேல். நேற்று முன்தினம் இரவு காயத்ரி தனது குழந்தையை வீட்டின் முன்னால் விட்டுவிட்டு மாட்டை கட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு வெறிநாய் குழந்தை வெற்றிவேலின் மூக்கை கடித்து குதறியது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த காயத்ரி, கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெறிநாயை துரத்தினார். படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.
அதே இரவில் மற்றொரு சம்பவத்தில் ஆர்.கே.பேட்டை பஜார் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரின் மகன் சந்திரமவுலி (வயது 14) வீட்டின் முன்னால் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென வெறிநாய் ஒன்று சிறுவன் மீது பாய்ந்து கடித்தது. அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி காயம் அடைந்த சிறுவனை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே இரவில் 2 பேரை வெறிநாய்க்கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.