கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்துக்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் நிம்மதியை இலங்கை கடற்படையும் அவ்வப்போது கெடுத்து விடுகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளி செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுவரை 537 மீனவர்களை கைது செய்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ளனர். 230 விசைப்படகுகள், படகுகளை பறிமுதல் செய்த இலங்கை அரசு, அதில் 50 புதிய விசைப்படகுகளை தனது கடற்படைக்கு ரோந்து பணிக்காக வழங்கி, மீதியுள்ளதை விறகுகளாக பயன்படுத்தி உள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் படகுகள், வலைகளை மீனவர்கள் இழந்து உள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அத்து மீறிய செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ெதாடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். தமிழக எம்பிக்களும், நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்கள் ஓரிரு வாரத்தில் விடுவிக்கப்படுவார்கள். தற்போது ஓராண்டு காலம் வரை சிறையில் அடைப்பது புதிய நடைமுறையாக உள்ளது.
மேலும் சிறைபிடிக்கப்படும் விசைப் படகுகள் அதன் உரிமையாளர் நேரில் சென்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜரானால் படகுகள் விடுவிக்கப்படும். ஆனால், தற்போது அந்த நிலையும் மாறியிருக்கிறது. உக்ரைன் போர், இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கு பேசும் பிரதமர் மோடி தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க இலங்கையுடன் பேச முடியவில்லையே என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் கடந்த மாதம் நடந்த மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வேதனையுடன் மீனவர்கள் பேசினர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட வேண்டும் என தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும், ஒருமித்த குரலில் வலியுறுத்தலையும் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாய வெற்றி பெற்றார். தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.
இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள். சிறையில் உள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என ஒன்றிய அரசை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தினார். இதற்கிடையில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயக நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை அதிபருடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இனி வரும் காலங்களிலாவது தமிழக மீனவர்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பது இலங்கை கடற்படையின் நடவடிக்கையை பொறுத்து தெரிய வரும். இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசு எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளதை பொருத்திருந்து பார்ப்போம்.
The post மீனவர்களுக்கு தீர்வு வருமா? appeared first on Dinakaran.