சென்னை: “கொழும்புவில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (அக்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீனவர்கள் நலனுக்கான இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29-ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை.