மீன ராசி ராசியாகும். இதனால் மீன ராசி ஆண் இயல்பிலேயே வளைந்து கொடுக்கக் கூடியவர். நெகிழ்ச்சித் தன்மை உடையவர். விறைத்துக் கொண்டும் முறைத்துக் கொண்டும் விலகிச் செல்பவர் கிடையாது. அமைதியாக ஒதுங்கி செல்வார். மீன ராசி ஆண்கள், குரு ராசியில் பிறந்தவர்கள் என்பதால் நேர்மையும் நம்பிக்கையும் உடையவர்கள். போகசக்தி அதிகம். கனக புஷ்பராக கல் இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினம் ஆகும்.
மென் கலைகளில் ஆர்வம்
மீனராசி ஆண்களுக்குப் படைப்பாற்றல் அதிகம். தங்கள் கனவு நிறைய நேரம் கனவுகளில் கற்பனைகளில் மிதந்து கொண்டிருப்பார்கள். அதில் மூழ்கிக் கிடப்பார்கள். ஆனால் நினைத்ததை அமைதியாக சாதிக்கும் திறன் பெற்றவர்கள். மிதுன ராசிக்காரர்கள் போல இவர்களுக்கும் கற்பனைத் திறன் மிகுதி என்றாலும், அவர்களைப் போல எழுத்துத் துறையில் பிரகாசிப்பதைவிட இசை, பாடல் போன்ற இன்னும் மென்மையான துறைகளில் நளினக் கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னளவிலாவது பாட்டுப் பாடாத மீனராசிக்காரர்களைப் பார்ப்பது கடினம். குளியலறைப் பாடகர்களாக பலர் இருப்பதுண்டு.
ஒழுங்கின்மை
மீன ராசி ஆணிடம் இருக்கும் ஒரு தனிப்பண்பு தங்கள் அறை, மேசை மற்றும் இருப்பிடத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லா பொருட்களும் மேசை மீது இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம் ஒவ்வொரு இடத்திலும் அதற்குரிய பொருட்கள் மட்டும் என்ற ஒழுங்குத்தன்மை இவர்களிடம் இருக்காது. ஆனால், இவர்கள் எதையும் தேடிக்கொண்டிருக்க மாட்டார்கள். எல்லாமே ஒரே இடத்தில் போட்டு வைத்திருப்பதால் எதைக் கேட்டாலும் அந்த பெட்டியிலோ அந்த இடத்திலோ அந்த மேசையிலோ இருந்து எடுத்து விடுவார்கள்.
லட்சியவாதிகள்
மீனராசி ஆண்கள் பெரும்பாலும் தங்களுக்கு என்று ஒரு சமூக லட்சியத்தை, தொழில் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதன் வழியில் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவார்கள். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படும் வழக்கம் இவர்களிடம் இல்லை. மிகப் பொறுமையாக அடிமேல் அடி எடுத்து வைத்து நகர்ந்து வெற்றிக் கனியைப் பறித்துவிடுவார்கள்.
பக்குவம் உள்ளவர்கள்
மீன ராசி ஆண்கள் நல்ல மனமுதிர்ச்சியும் மனப்பக்குவமும் தெளிவும் கொண்டவர்கள். அன்பும் பண்பும் மிக்கவர்கள். ஆனால் பல நேரங்களில் போனால் போகட்டும் என்று உறவுகளையும் நட்பையும் துண்டித்துக்கொள்வார்கள். நன்றியும் தியாகமும் நிறைந்தவர்கள் எனினும் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். இதனால் சில சமயம் நண்பர்கள் மற்றும் சுற்றத்தினருடன் கருத்து முரண்பாடு ஏற்படும்போது அதைப்பற்றி பேசித் தெளிவு பெறாமல் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விலகிச் சென்றுவிடுவர்.
விட்டுக் கொடுப்பவர்கள்
மீனராசி ஆண்கள், பொறுமையும் நிதானமும் நிறைந்தவர்கள். ஆயினும் பயமும் படபடப்பும் இவர்களுக்குள் இருக்கும். எனவே பிரச்னை எதற்கு? என்று நினைத்தபடி விலகிச் சென்று விடுவர். களத்தில் இறங்கிப் போராடத் தயங்குவர். பிழைத்துப் போகட்டும் போ என்று விலகிவிடுவர். தான் விரும்பும் பெண்ணை மற்றவர் விரும்பினால் இவர் ஒதுங்கி விடுவார். இதனால் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல வெற்றிகளும், பாராட்டுகளும், நல்வாய்ப்புகளும் அடுத்தவருக்குப் போய்விடும். மனதுக்குள் இழப்பை நினைத்து புழுங்கிக் கொண்டே இருப்பார்கள். வாய் திறந்து எவரிடமும் தங்களின் இழப்பையும் ஏக்கத்தையும் சொல்வது கிடையாது. அது வேண்டும் இது வேண்டும் என்று மற்றவருடன் சண்டை பிடிப்பவர்கள் கிடையாது. விட்டுக் கொடுத்துச் செல்வார்கள்.
சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுவார்
மீனராசி ஆண், அடுத்தவரின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். தன்னுடன் இருப்பவர். துன்பப்படுவது இவருக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும். `உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடல் வரிகளுக்கு உதாரண புருஷன் இவரே. மனைவியின் துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியாத இவர் மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய முன்வருவார். தங்களின் நேச நெஞ்சங்களுக்காக தோள் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்களுக்குப் பிரியமானவர்கள் எல்லோரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதை தங்கள் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள்.
பொருத்தமான பெண் ராசிகள்
மீனராசி நீர் ராசி என்பதால், கடகம், விருச்சிகம் போன்ற நீர்ராசி பெண்களோடு இவர்களுக்கு மனம் ஒத்து போகும். ரிஷபம், கன்னி, மகரம் போன்ற மண் ராசிக்கார பெண்களும் இவர்களோடு வாழ்க்கையில் இணைந்து வாழக்கூடும். துலாம் மற்றும் தனுசு ராசியில் பிறந்த பெண்கள்கூட ஓரளவு பொருந்தக் கூடியவர்களே. மேஷம், சிம்மம் ராசிப் பெண்கள் மீனராசி ஆண்களுடன் எப்போதும் முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும்தான் இருப்பார்கள். சிம்ம ராசிப் பெண் பழகத் தொடங்கிய பத்து நிமிஷத்தில் இவர் தலையில் அடித்து அமைதியாக உட்காரும்படி ஆணை இடுவாள். மீனராசி ஆண், மகரராசிப் பெண்ணுடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும்கூட திடீரென இவர்களுக்குள் பூசலும் பூகம்பமும் ஏற்பட்டு புரிதல் இன்றிப் பிரிய நேரிடும்.
இவர் தேடும் பெண்
மீனராசிக்காரர் தன்னைப் புரிந்து கொண்டு தன்னைப் போலவே மற்றவர்களிடம் அன்பு பாராட்டும் பெண்ணைத் தேடுவார். தன்னுடைய கற்பனா சக்திக்கும் படைப் பாற்றலுக்கும் ஏற்ற வகையில் ஆடல் பாடல் இசை போன்ற துறைகளில் ஆர்வம் உள்ள பெண்ணை நாடுவார். இவர் சாகச விரும்பி அல்ல. அமைதியான ஆரவாரம் இல்லாத வாழ்க்கையை விரும்புவார்.
ஆரவாரமற்ற மனைவி
மீனராசி ஆண், தன்னுடைய வாழ்க்கை சாதனைகளும் சவால்களும் இல்லாமல் அமைதியான நீரோடை போல கலக்கலும் குழப்பமும் இன்றி தெளிந்து காணப்பட வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய பெண்ணைத் தேடுவார். கோபதாபம் குறைந்த ஆரவாரம் இல்லாத பெண்ணைக் காதலிப்பார்.
புதுமை விரும்பி
மீன ராசி ஆண் பழமை விரும்பி கிடையாது. பக்தி பழமும் கிடையாது. இறைவனைவிட மனிதனை அதிகம் நேசிப்பார். அன்பானவர்களுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்துவார். தன்னைப் போலவே புதிய அனுபவங்களை வரவேற்கின்ற புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்கின்ற மாற்றத்தை எதிர்க்காத பெண்ணை விரும்புவார்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
மீனராசி ஆண்கள் மனதில் ஓர் அச்சமும் மறுப்பும் காணப்படும். எதையும் முந்திரிக்கொட்டை போல முந்திக் கொண்டு வந்து வலிய கைநீட்டி அள்ளிக் கொண்டு போகமாட்டார்கள். அவர்களை அழைத்து அவர்கள் கைகளைப் பிடித்து அவர்கள் கையில் கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்வார்கள்.
ஊருக்கு மணக்கும் தாழம்பூ
தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே மீனராசி ஆணின் முதல் குறிக்கோளாக இருக்கும். எல்லோரையும் சந்தோஷப்படுத்திப் பார்க்கும் ஆசையில் இவர் நிறைய செலவு செய்து விடுவார். இதனால் சிலர் கடனாளியாக இருந்து கஷ்டப்படுவது உண்டு. பிரியமானவர்களுக்குத் தாராளமாக செலவு செய்வதில் மகிழ்ச்சி அடைவார். தனக்குப் பின் தானம் என்ற குறிக்கோளை இவர் பின்பற்ற மாட்டார். அதனால் சில பெரிய குடும்பங்களில் பிறந்த மீனராசிக்கார ஆண்கள் ஊருக்கு நல்லவராக இருப்பார்கள். தனக்கென்று வரும் போது எதுவுமில்லாமல் நிற்பார். இவர் ஊருக்கு மணக்கும் தாழம்பூ.
The post மீனம் ராசி ஆண்கள் தாராள பிரபுக்கள் appeared first on Dinakaran.