
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்துவதை தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. "சொன்னதைச் செய்வோம்" என்று அறிவித்துவிட்டு சொன்னதற்கு முரணாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2022-ம் ஆண்டு வீடுகள், குறு சிறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ரெயில்வே மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்குமான மின் கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தியது. இதர மின் சேவைக் கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டன.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் வாயிலாக ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆறாயிரம் ரூபாய்க்கும் மேலாக கூடுதல் மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்கள் வயிற்றில் அடித்த அரசு தி.மு.க. அரசு. இதனைத் தொடர்ந்து ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள தி.மு.க. அரசு, தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அந்த வகையில், அண்மையில் வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளுக்கான மின் கட்டணம் உட்பட அனைத்து மின் கட்டணங்கள் மற்றும் நிலையான கட்டணங்களை இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், இதன்படி, குறைந்தபட்சம் 3.16 சதவீதம் கட்டண உயர்வு இருக்கும் என்றும் செய்திகள் வந்துள்ளன. ஆண்டுக்காண்டு மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை உயர்த்துவது ஏழையெளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதன் காரணமாக வாடகைக்கு குடியிருக்கும் ஏழையெளிய மக்கள் கூடுதல் நிதிச் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள். மேலும், விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும்.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர்த்த உத்தேசித்துள்ள கட்டண உயர்விற்கு அனுமதி மறுக்கவும், மக்கள் மீது சுமத்த உத்தேசித்துள்ள கூடுதல் நிதிச் சுமையை அரசே ஏற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.