![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38295484-roban.webp)
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.
முன்னதாக சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் பார்மின்றி தவித்து தோல்விக்கு காரணமாய் அமைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முதல் போட்டியில் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இதனால் அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் என்ன செய்தாலும் எவ்வளவு பயிற்சிகள் எடுத்தாலும் அசத்த முடியாது என்ற நிலையில் ரோகித் சர்மா இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். எனவே கடந்த காலங்களில் அசத்திய போட்டிகளின் பழைய வீடியோக்களை பார்க்குமாறு அவர் ரோகித்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரன்கள் அடிக்கவில்லை என்ற நிலைக்கு தன்னுடைய கெரியரில் ரோகித் வந்துள்ளார். அது போன்ற நேரங்களில் பயிற்சிகளை எடுப்பது அதிகமாக பயனை கொடுக்காது. எனவே ரோகித் சர்மா கொஞ்சம் தனிமையில் நேரத்தை செலவிட்டு வெற்றிகரமாக செயல்பட்ட தருணங்களை திரும்பி பார்க்க வேண்டும். குறிப்பாக சில வீடியோக்களை பார்த்து எம்மாதிரியான செயல்முறைகள் மற்றும் வழக்கத்தை நாம் கொண்டிருந்தோம் என்பதை கண்டறிய வேண்டும்.
சில நேரங்களில் பழைய பார்மை நீங்கள் பெற வேண்டுமெனில் இது போன்ற விஷயங்கள் பெரிய உதவியை செய்யும். கடந்த காலங்களில் உங்களுக்கு என்ன வேலை செய்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தற்போதைய நிலையை அதிகமாக சிந்திக்க கூடாது" என்று கூறினார்.