
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இதனால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
இதனையடுத்து 10 அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள் தங்களது வீடுகளுக்கு உடனடியாக திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு விமானம் மூலம் கிளம்பினர். ஒரு சிலரை தவிர எல்லோரும் தாயகம் திரும்பி விட்டனர்.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 5 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களை ஒரிரு நாட்களுக்குள் மீண்டும் ஒன்றிணைக்குமாறு அணி நிர்வாகங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக சென்னைக்கு எதிரான ஆட்டத்தை தவறவிட்ட அவர் தற்போது தாயகம் திரும்பியுள்ளார்.
எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. அவருக்கு காயம் முழுமையாக குணமடைந்திருந்தால் மட்டுமே ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்கும். எனவே அவர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நடப்பு தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ஜோஷ் ஹேசில்வுட் பெங்களூரு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருவேளை அவர் மீண்டும் வரவில்லையெனில் அது பெங்களூரு அணிக்கு பலத்த பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இது குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.