உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், அதிபர் தேர்தல் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாட்டு மக்களும் இந்த தேர்தலின் முடிவை உன்னிப்பாக கவனித்து வந்தனர். முக்கிய பிரச்னைகளில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பொறுத்தே, பல நாடுகள் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே இதற்கு முதன்மையான காரணம். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இம்முறை குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையே மிகக் கடும் போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல வாக்கு எண்ணிக்கையின்போது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னணி வகித்தாலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் அவ்வப்போது நெருக்கடி கொடுத்து வந்தார்.
உலக நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்டோரின் ஆதரவுடன் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்புக்கே இம்முறை வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிப்புகள் வெளியாகின. அதேபோல டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக வெற்றி வாகை சூடியுள்ளார். இவர் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளார். டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர். கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோற்றுப் போனார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் அதிபராக திரும்பியுள்ளார். இதன்மூலம், ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கருத்து வலுப்பெற்றிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பதவியேற்பதால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஆனால், சில முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாகவும், சில முடிவுகள் எதிராகவும் இருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருப்பது போல டிரம்ப் காட்டிக் கொள்வார். பிரதமர் மோடியும், ‘தனது நண்பருக்கு வாழ்த்துகள்’ என்றே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதே நேரம் டிரம்ப் இந்திய அரசின் வரி தொடர்பான கொள்கை முடிவுகளை கடுமையாக விமர்சிக்கவும் செய்வார். பொது எதிரி என்ற வகையில் சீனாவுக்கு எதிரான கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துப் போகலாம். அதே நேரம், மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர், ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் போன்றவற்றில் டிரம்ப்பின் நிலைப்பாடுகள் இந்தியாவுக்கு எதிராக இருக்கவே வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வெளியுறவுக்கொள்கை, வர்த்தக உறவு, இரு நாடுகளும் இணைந்து செயல்படும் துறைகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.
வெற்றிக்குப் பின் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற உழைப்போம். போர்களை தொடங்க மாட்டேன். நிறுத்துவேன். நமக்கு வலிமையான, அதிகாரம் மிக்க ராணுவம் தேவை’’ என்று கூறியுள்ளார். போர் நிறுத்த சமாதானப்புறவை பறக்க விட்டாலும், வலிமை, அதிகாரம் படைத்த ராணுவம் தேவை என்ற டிரம்ப்பின் இரட்டை நிலை வார்த்தைகளை உலக நாடுகளும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. 2016ல் வெற்றி, 2020ல் தோல்வி, 2024ல் வெற்றி என அமெரிக்க அதிபர் தேர்தலை அதிர வைத்த சாதனையாளராக பார்க்கப்படும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்…? கவனிப்போம்…!
The post மீண்டும் டிரம்ப் appeared first on Dinakaran.