பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் ஒன்று சேர்ந்த மறுநாளே தனது மனைவியான நடிகையின் மீது மிளகுப்பொடி ஸ்பிரே வீசி கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். பிரபலமான கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை ஸ்ருதிக்கும், அவரது கணவர் அமரீஷுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் பணப்பிரச்னை மற்றும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு, உறவில் விரிசல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவரைப் பிரிந்து, சகோதரர் வீட்டுக்குச் சென்ற ஸ்ருதி, தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்தனர். இதற்காக, நேற்று முன்தினம் பெங்களூரு முனேஸ்வரா லேஅவுட்டில் உள்ள புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்து, தங்களது வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்கத் திட்டமிட்டனர்.
ஆனால், அவர்கள் ஒன்றுசேர்ந்த மறுநாளே நிலைமை விபரீதமாக மாறியது. ேநற்று இவர்களது பிள்ளைகள் கல்லூரிக்குச் சென்ற பிறகு, அமரீஷ் தனது மனைவி ஸ்ருதியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். முதலில் ஸ்ருதியின் முகத்தில் மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து, பின்னர் கத்தியால் அவரது கழுத்து, விலா மற்றும் தொடைப் பகுதிகளில் பலமுறை குத்தியுள்ளார். மேலும், தலைமுடியைப் பிடித்து இழுத்து, சுவரில் தலையை மோதியதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த ஸ்ருதி, விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன்னை கொலை செய்ய முயன்றதாக ஸ்ருதி தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அமரீஷை கைது செய்துள்ள ஹனுமந்த நகர் போலீசார், அவர் மீது கொலை முயற்சி மற்றும் குடும்ப வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மீண்டும் ஒன்று சேர்ந்த மறுநாளே விபரீதம்; மிளகுப்பொடி ‘ஸ்பிரே’ வீசி நடிகையை கத்தியால் குத்திய கணவர்; கர்நாடகாவில் பயங்கரம் appeared first on Dinakaran.