சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து இரண்டாவது முறையாக 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். இந்த அமெரிக்க விமானம் இன்று பஞ்சாப் வந்தடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் நிர்வாக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரமாக்கியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் தேதி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலமாக நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு விமானத்தில் அழைத்துவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அழைத்து கொண்டு இரண்டாவது விமானம் இன்று பஞ்சாப் வருகின்றது. இன்று இரவு சுமார் 10 மணியளவில் அமிர்தசரஸ் வரும் அமெரிக்க ராணுவ விமானத்தில் 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 67 பேர் பஞ்சாபை சேர்ந்தவர், அரியானாவை சேர்ந்த 33 பேர், குஜராத்தை சேர்ந்த 8 பேர், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேர், கோவா, மகாராஷ்டிராமற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா இரண்டு பேர் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 119 பேர் இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகின்றனர். மேலும் நாடு கடத்தப்படுபவர்களை ஏற்றி வரும் அமெரிக்க ராணுவத்தின் மூன்றாவது விமானம் நாளை வருவதாகவும் கூறப்படுகின்றது.
* பஞ்சாபில் தரையிறங்குவது ஏன்?
அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்குவது குறித்து பஞ்சாபில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, ‘‘பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது பஞ்சாபை அவதூறு செய்ய விரும்புகின்றது.
விமானங்கள் ஏன் குஜராத், அரியானா அல்லது டெல்லியில் தரையிறங்கவில்லை?” என்றார். பஞ்சாபை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத மனித கடத்தல் பிரச்னை குறித்து விசாரிப்பதற்கு பஞ்சாப் அரசு சமீபத்தில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
The post மீண்டும் இந்தியர்கள் நாடு கடத்தல் 119 பேருடன் பஞ்சாப் வரும் 2வது அமெரிக்க ராணுவ விமானம்: அடுத்த விமானம் நாளை வருகை appeared first on Dinakaran.