மீண்டும் இணையும் கார்த்தி -சிறுத்தை சிவா கூட்டணி

1 day ago 5

தெலுங்கு திரை உலகில் இயக்குனராக அறிமுகமான சிவா, தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர், கடந்த 2011ம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து அனைவராலும் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழில் இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்தது இவர் ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கங்குவா எனும் பீரியாடிக் திரைப்படத்தை இயக்கினார் சிறுத்தை சிவா. இந்த படம் சிலருக்கு பிடித்திருந்தாலும் சிலரை திருப்திபடுத்தவில்லை. எனவே இப்படம் வசூலிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்நிலையில்தான் சிறுத்தை படக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் கார்த்தி, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த சிறுத்தை திரைப்படம் அவருக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அதைத்தொடர்ந்து கங்குவா திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி. தற்போது கார்த்தி, மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தினை சூர்யா தயாரிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படமானது எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் கார்த்தி தன்னுடைய அடுத்தடுத்த கமிட்மெண்டுகளை முடித்த பின்னர் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article