பென் சியர்ஸ் அபார பந்துவீச்சு... பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

1 day ago 2

ஹாமில்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற நியூசிலாந்து முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 292 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஹே 99 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் ஜூனியர், சுபியான் முஹீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட பாகிஸ்தான் அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதில் அப்துல்லா ஷபீக் 1 ரன், இமாம் உல் ஹக் 3 ரன், பாபர் அசாம் 1 ரன், முகமது ரிஸ்வான் 5 ரன், சல்மான் ஆகா 9 ரன், தையர் தாஹிர் 13 ரன், முகமது வாசிம் ஜூனியர் 1 ரன், ஹாரிஸ் ரவூப் 3 ரன், ஆகிப் ஜாவத் 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து பஹீப் அஷ்ரப் மற்றும் நசீம் ஷா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் நசீம் ஷா 51 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 73 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பென் சியர்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 5ம் தேதி நடக்கிறது.

Read Entire Article