மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: 40 ஆண்டு நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி

3 months ago 22

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 1956ம் ஆண்டு துவங்கப்பட்டு 68 ஆண்டுகளாக டிவிஎஸ் ரெட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தற்போது வரை செயல்பட்டு வருகிறது. கடந்த 1984-1987ம் ஆண்டுகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்களில் வழக்கறிஞர் பத்மநாபன், தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, மும்பை கண்ணன், சதீஸ், சிவானந்தம், கிருஷ்ண பிரசாத், பாலாஜி, முரளி, தாஜ்தீன், அன்பு தாஸ், பாலாமணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் வாட்சப் குழு ஒன்றை உருவாக்கி கடந்த ஒரு வருடமாக முன்னாள் மாணவர்களின் விபரங்களை சேகரித்து அனைவரையும் ஒன்றிணைத்து, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த 150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற 16 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள், சந்தன மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுத்தனர்.

அரசு தனியார் நிறுவனம், சுயதொழில், வெளிநாடு என பல்வேறு பணிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளையும், தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த மலரும் நினைவுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக பள்ளி துவங்கிய காலத்தில் இருந்து ஓய்வு பெறும் வரை பணி செய்து தற்போது 91 வயதாகும் முன்னாள் தலைமை ஆசிரியர் பாஸ்கர் என்பவரை முன்னாள் மாணவர்கள் வணங்கி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்று அவருக்கு மரியாதை செலுத்தி கவுரவப்படுத்தினர். பள்ளியின் நிர்வாக குழு தலைவர் ஸ்ரீமதி மற்றும் அவரது குடும்பத்தினரை கவுரவப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

The post மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: 40 ஆண்டு நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article