மீசைக்கார பழைய போலீஸ் அதிகாரி கட்சி தாவும் முடிவில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 17

‘‘குட்கா கடத்தலில் நூதன வழியை கையாளுவதா குற்றச்சாட்டு வந்திருக்கே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதனை மீறி விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்களை காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தி கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் கடைசியில் வேலியே பயிரை மேய்ந்தது போல் அரசு போக்குவரத்து கழக டிரைவர், நடத்துனர்கள் குட்கா கடத்தலில் ஈடுபடும் பகீர் தகவல் வெளியாகி இருக்கிறதாம்.

புரம் என்று முடியும் அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி டெப்போக்களில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு செல்லும் பேருந்துகளில் டிரைவர், ஓட்டுனராக இருப்பவர்கள் பலர் மீது இந்த பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதாம்.

குறைந்த விலையில் கிடைக்கும் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பேருந்துக்கு அடியில் மூட்டைகளில் கட்டிக்கொண்டு கடத்தலில் ஈடுபடுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாம் பெங்களூருவுக்கு சென்றால் ஒரு டூட்டி என்ற நிலையில், குட்கா கடத்தலுக்கு டிரைவருக்கு 2 ஆயிரம், நடத்தினருக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பொட்டலங்களை கட்டி குட்காவை எடுத்து வந்து கடைகளுக்கு ரகசியமாக சப்ளை செய்கிறார்களாம்.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள், மாநில எல்லை பகுதியில் வழியில் நடத்தி சோதனை நடத்தி கடத்தலில் சிக்கிய பலர் சஸ்பெண்டும், வேறு டெப்போக்களுக்கு இடமாறுதல் உத்தரவு நடைபெற்று வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல்கலைக்கழக பிரச்னை என்னவாம்..’’ ‘‘தூங்கா நகர பல்கலைக்கழகமானது சமீபகாலமாக சிலரது தூக்கத்தை கெடுக்கும் பல்கலைக்கழகமாக மாறி வருகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பல்கலைக்கழகத்தில் ஒரு சிலர் எரியும் வீட்டில் எடுத்தவரை லாபம் என்கிற கணக்கில் செயல்படுகின்றனர்.

போலி சான்றிதழ் துவங்கி பழைய பொருட்களை விற்பனை செய்வது வரை பல்வேறு வகையான முறைகேடுகள் நடந்தவாறும், வெளிவந்தவிதமாயும் உள்ளது. இதற்கு முன்னர் நன்கு படித்தவர்கள் மட்டுமே தங்கப்பதக்கம் வாங்கி வந்த நிலையில், தற்போது அந்த பதக்கங்களையும் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் மூலம் வழங்குவதாக மாணவர்கள் குமுறி வருகின்றனர். இங்கு படித்த தனது மகளுக்கு, பேராசிரியர் ஒருவர், தேர்வில் மதிப்பெண்களை தாராளமாய் அள்ளி வழங்கியதாகவும, இதனால் அவரது மகள் தங்க பதக்கத்திற்கு தகுதி பெற்றதாக தகவல்கள் பரவுகின்றன.

இதுபோன்ற செயல்களால் தான் திறமையான மாணவர்கள் பலர் பின்னுக்கு போகும் நிலை ஏற்படுகிறதாம். இந்த விவகாரம் தான் இப்போது தூங்கா நகரத்து பல்கலைக்கழகத்தில் சுற்றி சுற்றி வருகிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மீசைக்காரர் மீண்டும் வேறுகொடியை பிடிக்க போறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘காக்கித்துறையில் டிஜிபியாக இருந்து மாஜியாகிய அந்த மீசைக்காரர், ரொம்பவே குழப்பத்துல இருக்காராம். மாஜியானவுடன் ஓடிப்போய் மம்மியிடம் சரணடைந்தாரு.

அவரது தீவிர பற்றின் காரணமாக, மயிலாப்பூரில் சீட்டு கொடுத்து வெற்றி பெற வச்சாங்களாம் மம்மி. ஆனா, அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்துச்சா என்றால், சொல்லிக்கொள்ளும் வகையில் ஏதுமில்லையாம். ஐந்து ஆண்டும் அப்படியே இருந்து நாட்களை கழிச்சிட்டாராம். அதன்பிறகு இலைக்கட்சி தலைவரை சந்திச்சி ஏதாவது ஒரு பொறுப்பை வாங்கிடலாமுன்னு போட்ட திட்டம் ஒன்னும் பலிக்கலையாம். இலைக்கட்சி தலைவரின் கடைக்கண் பார்வை நம்மீது படாதா என அவர் பல்வேறு வழிமுறைகளை கையாண்டாராம்.

இதற்கு பிரதிபலனா அந்த மீசைக்காரர் மீது வழக்கு பாய்ந்தது தான் மிச்சமாம். அதிலிருந்து வெளியே வருவதற்குள் அவருக்கு நாக்கு வெளியே தள்ளிட்டதா கட்சிக்காரங்க சொல்றாங்க. என்றாலும் இலைக்கட்சி தலைவரின் பார்வை அவர் மீது விழலையாம். இனிமேல் இலைக்கட்சியில் இருந்தால் குப்பை கொட்ட முடியாதுங்கிற முடிவுக்கு வந்திருக்காராம். இலைக்கட்சியை பொறுத்தவரை, இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது. கூட்டணி வரும் என்று சொன்னாலும் அது எப்படி வரும் என்பதை சொல்ல இலைக்கட்சி தலைவர் தயாரில்லையாம்.

இனிமேல் இங்கு நீடித்தால், இலவு காத்த கிளி போலத்தான் தன்னோட நிலையும் ஆகிடும் என்பதால், வேறு கட்சிக்கு தாவ திட்டம் போட்டிருக்காராம். விரைவில் இன்னொரு கட்சியின் கொடியை அவர் பிடிக்கப்போறாராம். மாஜியான நேரத்துல கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல், இவரை போன்றவர்களுக்கு பதவி வழங்கி மம்மி அழகு பார்த்தாங்க. எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, இன்னும் பதவிக்காக ஓடுபவர்கள் இக்கட்சிக்கு தேவையில்லை என ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கூட்டத்தில் சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசினாராமே மாஜி மந்திரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் சமீபகாலமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே ‘ஆளில்லாத கடையில் டீ ஆத்துவதாக’ இலைக்கட்சியினர் போராட்டங்கள் குறித்து பொதுமக்களே கிண்டலடிக்கும் நிலைமை இருக்கிறது. இவ்வரிசையில் கட்சித் தலைமை அறிவிப்பில், அத்தனை கடைகளிலும் கரை வேட்டிகள் பசியாறி முடித்தபடியே பந்தலுக்கு நகர்ந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்ற போராட்டம் ஒன்றும் சில தினங்கள் முன் நடந்தது.

உதயமானவரால் நடத்தப்பட்ட இந்நிகழ்வை மாஜிகள் உளறல்காரரும், தெர்மாகோலும் துவக்கி வைத்தனர். தெர்மாகோல் மேடையிலே, அந்நியன் விக்ரம் போல மிரட்டலாகவும், அடுத்த நிமிடமே கெஞ்சலாகவும் பேசித் தீர்த்தார். பாதுகாப்பு போலீசாரை பார்த்து, ‘இலைக்கட்சியினரை சீண்டாதீர்… அவர்கள் இருக்கை போட்டுக் கொள்ளட்டும்’ எனவும், அடுத்து திடீரென, ‘‘போலீஸ் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறது’’ என்றும் பேசி அவர்களுக்கென பரிதாபப்படவும் செய்தார்.

தன் பேச்சுக்கு கைதட்டும்படி கட்சியினரிடம் கேட்டுப்பெற்ற தெர்மா கோல், கட்சித் தொண்டர்கள் பாதியிலேயே எழுந்து போவதைப் பார்த்து அச்சத்தோடு, ‘இடையில் எந்திருச்சு போகக் கூடாது.. யூடியூப்ல போட்டுருவாங்க… கடைசிவரைக்கும் இருப்பீங்களாப்பா.. நன்றிப்பா, நன்றி’ என்று கெஞ்சவும் செய்தார். ‘போராட்டத்துல ஆளுங்கட்சியினரை மட்டுமே விமர்சனம் பண்ணிட்டு, மக்களுக்கான பிரச்னையைப் பேசுறதுக்கு சப்ஜெக்டே இல்லாம.. எப்படி எல்லாம் உருட்டுறாரு பாருங்க..’ என்று தெர்மாகோலை விமர்சித்த கட்சித் தொண்டர்களின் புலம்பல் அனைவரது காதுகளிலும் விழுந்தது..’’ என்றார் விக்கியானந்தா.

The post மீசைக்கார பழைய போலீஸ் அதிகாரி கட்சி தாவும் முடிவில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article