'மிஸ் யூ' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

6 months ago 24

என்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'மிஸ் யூ'. இந்த படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனருடன் இணைந்து அசோக்.ஆர் வசனம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், 'மிஸ் யூ' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் சித்தார்த் சாலை விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போகிறார். இந்த நிலையில் நாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்தித்து காதல் வயப்படுகிறார். அவரது புகைப்படத்தை தன் அம்மாவுக்கு அனுப்பி முறைப்படி பெண் கேட்கும்படி சொல்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் சித்தார்த் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன? ஆஷிகா ஆனந்த யார்? என்பதற்கு விடையாக மீதி கதையாக உள்ளது.

சித்தார்த்துக்கு வேகமும், விவேகமும் உள்ள கதாபாத்திரம். அதை ரசித்து செய்து இருப்பது சிறப்பு. எகிற வேண்டிய இடத்தில் எகிறி, அழவேண்டிய இடத்தில் அழுது, காதலிக்க வேண்டிய இடத்தில் காதலித்து கதாபாத்திரத்தை வெகு அற்புதமாக செய்துள்ளார்.

சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும் தனி ஆவர்த்தனம் செய்வதை ரசிக்க முடிகிறது. ஆஷிகா ரங்கநாத் அழகிலும், நடிப்பிலும் அசத்துகிறார். பேருந்தில் இருக்கைக்காக டார்ச்சர் பண்ணுவது, அப்பாவை தாய்போல் கவனிப்பது, மிடுக்காக பேசுவது என தனக்கான இடங்களை மிக அழுத்தமான நடிப்பால் நிரப்புகிறார்.

நண்பராக வரும் கருணாகரன் சீரான கதையோட்டத்துக்கு நேர்த்தியான நடிப்பை வழங்கி அழுத்தம் சேர்த்து இருக்கிறார். பால சரவணன், லொள்ளு சபா மாறன் ஆகியோர் அளவாக காமெடி செய்து ரசிக்க வைக்கிறார்கள். பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், படவா கோபி, ரமா, அனுபமா குமார், சஸ்திகா உட்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வில்லனாக வரும் சரத் லோகிதாஸ்வா கதாபாத்திரத்தில் நிறைவு. ஜிப்ரான் இசையில் பாடல்கள் இனிமை. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் வண்ணமயமான கதைக்கு அற்புதமாக ஒளிப்பதிவு செய்து படத்துக்கு அழகு சேர்த்துள்ளார். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் பிற்பகுதியிலும் இருந்திருக்கலாம். காதல் கதையை புதிய கோணத்தில் காமெடி, சென்டிமெண்ட் கலந்து உணர்வுப்பூர்வமாகவும், ரசிக்கும்படியும் கொடுத்து கவனம் பெறுகிறார் இயக்குனர் ராஜசேகர்.

Read Entire Article