க.பரமத்தி, ஜன.26: மிளகாய் பயிர்களை சாம்பல் நோய் தாக்கினால், அதிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகள் குறித்து வினோபா இயற்கை வேளாண் ஆராய்ச்சி பண்ணை விவசாயி கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் அதிக பரப்பளவில் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பனி மற்றும் குளிர் காலம் என்பதால் பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ன மாற்றம் காரணமாக மிளகாய் செடிகளில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பயிரானது, இலைப்பரப்பு உதிர்தல், இலையின் அடிப்புறம் வெள்ளை நிறப்பொடி போன்ற வளர்ச்சி காணப்படும். இலைகள் காய்ந்து, வேகமாக சுருங்கிவிடுவதுடன், பூக்காம்புகள் குட்டையான வளர்ச்சியுடன் உருமாறியும் காணப்படும்.
மண்ணில் உள்ள பயிர் குப்பைகளின் மீது இந்த பூஞ்சான் உயிர் வாழும் என்பதுடன், விதையின் மூலமும் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ரகங்களை பயிரிட வேண்டும். சரியான இடைவெளியில் பயிர் செய்ய வேண்டும். நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படும் போது நனையும் கந்தகம் 0.25 சதவீதம் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அத்துடன் போஸ்டைல் அலுமினியம் 2.5 கிராம் லிட்டருக்கு, அல்லது டினோகார்ப் 2.50 மில்லி லிட்டருக்கு அல்லது பிப்ரோநில் 2 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுபடுத்தலாம். மேலும் இது குறித்த சந்தேக விபரங்களுக்கு அருகேயுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இவ்வாறு வினோபா இயற்கை வேளாண் ஆராய்ச்சி பண்ணை முன்னோடி விவசாயி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
The post மிளகாய் சாகுபடியில் சாம்பல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.