மிருதங்கத்தால் கிடைத்த பெருமை!

5 hours ago 3

நன்றி குங்குமம் தோழி

‘‘என்னுடைய பூர்வீகம் மல்லாங்கிணறு என்ற கிராமம். நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் திருப்பரங்குன்றத்தில்தான். இப்போது 11ம் வகுப்புக்கான தேர்வு எழுதி இருக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் மிருதங்க கலைஞரான ஹம்ஸவர்த்தினி.‘‘என்னுடைய அம்மா வழி தாத்தா நாதஸ்வரக் கலைஞர். ஒருமுறை காலாண்டு விடுமுறைக்காக நான் என் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்ப நான் யதார்த்தமா தாளம் போடுவதைப் பார்த்த என் தாத்தா, ‘என் பேத்தி நல்லா தாளம் போடுறா, மிருதங்கம் வாசிக்க பயிற்சி அளிக்க போறேன்னு’ சொன்னார்.

என் பெற்றோரும் தாத்தாவின் சொல்லுக்கு சம்மதம் தர, தாத்தா அவர் சொன்னது போல புகழ்பெற்ற மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன் ஐயாவிடம் என்னை மிருதங்க பயிற்சிக்காக சேர்த்துவிட்டார். தொடக்கத்தில் நான் சிறிது தடுமாறினாலும், மிருதங்கத்தின் மேல் இருந்த காதலால், எனக்கான தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என்பதற்காக மிகவும் ஆர்வத்துடன் சீக்கிரமாகவே மிருதங்கம் வாசிக்கும் விதத்தை கற்றுக் கொண்டேன்.

அதனால் குறுகிய காலத்திலேயே மேடையேறும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை மாயாண்டி கோயிலில் நடைபெற்ற இசைக் கலைஞர்கள் விழாவில் என்னுடைய முதல் மேடைக் கச்சேரி அரங்கேறியது. அந்த நிகழ்வை இன்று வரை என்னால் மறக்க முடியாது. அதன் பிறகு பள்ளி அளவில் நடைபெறும் பல்வேறு இசைப் போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன். எங்க பள்ளி ஆண்டு விழாவில் பாட்டுக் கச்சேரியில் நான் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்தேன். இவை எல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்’’ என்றவர், தன்னுடைய பள்ளி அவரின் கலை ஆர்வத்திற்கு மிகவும் பக்கபலமாக இருப்பதாக தெரிவித்தார்.

‘‘நான் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான இசைப் போட்டிகளில் பங்கு பெறுவேன். அப்போது எங்க மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளை அதிகளவில் நான் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய பள்ளி என் கல்விக்கு மட்டுமில்லை என் இசை ஆர்வத்துக்கும் மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியின் அறிவிப்பு வரும் போது என்னை ஊக்குவித்து அதில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினை அளித்து வருகிறார்கள்.

ஒரு முறை பள்ளியில் இருந்து தேசிய மாணவர் படை சார்பில் 10 நாட்கள் இடையப்பட்டி கிராமத்திற்கு பல்வேறு பயிற்சிகளுக்காக சென்றிருந்தோம். அங்கு நடைபெற்ற பாட்டுப் போட்டியில் நான் பாடிய பாட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது. அதை எங்க வீட்டில் தெரிவித்த போது எனக்குள் பாடும் திறமையும் இருப்பதை அறிந்து அதற்கான பயிற்சியும் என் குருநாதர் எனக்கு அளித்து வருகிறார்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட மேடைகளில் மிருதங்கம் வாசித்து இருக்கிறேன். அதில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு வாசித்தேன். 2024ம் ஆண்டு உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நிகழ்விலும் அதே வருடம் சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் மிருதங்கம் வாசித்த நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியாது.

இந்தாண்டு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற புதுக்கோட்டை மான் தட்சிணாமூர்த்திப் பிள்ளை குருபூஜை விழாவில், தனி ஆவர்த்தனம் வாசித்தேன். என்னுடைய கலை ஆர்வத்திற்கு வழிகாட்டியாக என் பெற்றோர்கள் இருப்பதால்தான் என்னால் அதில் சாதிக்க முடிகிறது’’ என்றவர் சிறந்த மிருதங்கக் கலைஞர், கலைச்சுடர், இசைக் கலைமணி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

The post மிருதங்கத்தால் கிடைத்த பெருமை! appeared first on Dinakaran.

Read Entire Article