சபர்மதி: குஜராத்தில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய கார்கே, தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த சபர்மதி நதிக்கரையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் அடிப்படைப் பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மதவாதப் பிரிவினைகளை உருவாக்குகிறது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-வும் தேசிய தலைவர்களின் வரலாற்றைத் திரித்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சர்தார் வல்லபாய் படேலுக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே பகை இருந்ததாக பாஜக தவறான கருத்தை பரப்புகிறது.
ஆனால் அவர்கள் இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். 140 ஆண்டு கால வரலாறு கொண்ட காங்கிரஸ், நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் ஆகியோரின் பாரம்பரியத்தை பேணுவதற்கு இந்த மாநாடு உதவும். தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது. எல்லா துறைகளிலும் தலையிட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறும். மின்னணு எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட்டு, வாக்கு சீட்டு முறைக்கு மாறிவிட்டன. உலகில் எங்குமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறை இல்லை. இந்தியாவின் 140 கோடி மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராகவும், வாக்கு சீட்டு முறைக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவுக்கு எதிராக 26% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த முக்கிய பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை. மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பதன் மூலம் ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஒற்றை தலைமையை ேநாக்கி செல்கிறது. ஒரு சிலரின் கைகளில் ஆட்சி அதிகாரம் செல்வதை அனுமதிக்க முடியாது. பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக நீதி ஆகியவை இன்றைய முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இவற்றிற்காக காங்கிரஸ் போராடும். காங்கிரஸை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டும்.
வரும் 2027 குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்த வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றார். இன்றுடன் குஜராத் மாநாடு முடியும் நிலையில், அரசியல், பொருளாதாரம், காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்ப்பு; தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது : குஜராத் மாநாட்டில் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.