மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது - முத்தரசன்

3 hours ago 2

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளன.

அஇஅதிமுக ஆட்சியில் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பில் இருந்த வரை மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் 2017 ஆம் ஆண்டில் உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இதனால் மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தை எடப்பாடி அரசு ஏற்படுத்தி விட்டது. முன்னாள் அஇஅதிமுக பொதுச் செயலாளர், ஜெ.ஜெயலலிதா வலுவாக எதிர்த்து வந்த உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு கையெழுத்து போட்டு, அவரது கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்து, தமிழ்நாட்டு மக்களின் நலனை அடகு வைத்ததை தமிழ்நாடு ஒரு போதும் மன்னிக்காது.

உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் ஆண்டுக்கு 6 சதவீதம் அல்லது ஆண்டின் முடிவில் நிலவும் பணவீக்கம் இதில் எது குறைவோ, அந்த அளவில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இதன்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றது. இதன் பாதிப்புகள் கடுமையாக ஏற்படுகின்றன.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் விலைவாசி உயர்ந்து, மக்கள் வாழ்க்கை சுமையை கூட்டி வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு 2.18 சதவீதமும், 2024 ஆம் ஆண்டு 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவங்கள் நிலைக் கட்டணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article