மினி வேனில் ரகசிய அறை அமைத்து ₹10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல்

1 month ago 5

சிதம்பரம், டிச. 12: சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், தர், ரமணி, பிரகாஷ்தமன் கஜேந்திரன், புருஷோத் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் அண்ணாமலை நகர் அருகே கடவாச்சேரி பகுதியில் புதிய மேம்பாலம் அருகில் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரகசிய அறை அமைக்கப்பட்டு, அதில் ஹான்ஸ் மூட்டைகள் 67, விமல் மூட்டைகள் 5 என மொத்தம் 72 மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தலுக்கு காரணமான மொத்த வியாபாரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த முத்தையன் மகன் ஆரோக்கியராஜ்(43), புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வந்த தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மணி மகன் பச்சையப்பன்(28) மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வாங்க வந்த சேத்தியாத்தோப்பு குமரகுடியை சேர்ந்த மணி மகன் அருள்ராஜ்(32), சேத்தியாத்தோப்பு எறும்பூரை சேர்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன்(35), குபேர் மகன் பிரேம்குமார்(22) ஆகிய 5 பேரையும் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் மதிப்பிலான 72 மூட்டை புகையிலை பொருட்கள், 2 மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள், 2 மினி வேன் உள்ளிட்டவை சுமார் ₹30 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மினி வேனில் ரகசிய அறை அமைத்து ₹10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article