சிவகாசி, ஜன.12: சம்பளம் வழங்க கோரி சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த மாநகரில் சேகரமாகும் குப்பைகள் தனியார் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 270 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. வழக்கமாக 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 10ம் தேதி ஆகியும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முன் தினம் காலை திடீரென மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த சுகாதாரப் பிரிவு அதிகாரி சித்திக், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பளம் பெற்று தர ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post சிவகாசியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.