விருத்தாசலம், பிப். 23: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழையபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (40), லட்சுமி (55), புஷ்பா (70), அன்புமணி (23), பூராசாமி (45), பிரகாஷ் மகன்கள் தருண்ராஜ் (9), சரண் (12), சாந்தி (45), உள்ளிட்ட 37 பேர் விருத்தாசலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஊருக்கு மினி டெம்போவில் திரும்பிக் கொண்டிருந்தனர். விருத்தாசலம் அடுத்த இருசாலகுப்பத்திற்கும், கச்சிராயநத்தத்திற்கும் இடையே மினி டெம்போ சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில் மினி டெம்போவில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் (50), செல்வம் (37), தர்மலிங்கம் (55), பாஸ்கர் (55), பத்மாவதி (50), குப்புசாமி (55), செந்தாமரை (45), வேம்பரசி (32), தமிழ்ச்செல்வி (52), அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் முண்டியம்பாக்கத்தில் சேர்க்கப்பட்ட விவசாய தொழிலாளி குப்புசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், தாசில்தார் உதயகுமார் உள்ளிட்டோர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மினி டெம்போ கவிழ்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.