மிதுனம் ராசி உள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு திருமணம் நடைபெறுமா?

1 month ago 8

?மிதுனம் ராசி உள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு திருமணம் நடைபெறுமா? எந்த கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்?
– சு.சுமதி, ராமநாதபுரம்.

பொதுவாக ராசியினைக் கொண்டு திருமண யோகத்தைச் சொல்ல முடியாது. இது அவரவருடைய தனிப்பட்ட ஜாதக பலத்தினைப் பொறுத்தது. மிதுன ராசியிலேயே ஐந்து வயது குழந்தையும் இருக்கும், ஐம்பது வயதினைக் கடந்தவர்களும் இருப்பார்கள். ஆக, பொதுவாக ஒரு ராசியினைச் சொல்லி இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று சொல்ல இயலாது. அவரவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது வலுப்பெற்று உள்ளதா, அதற்குரிய தசாபுக்தி என்பது வந்துவிட்டதா என்பதைக் கணக்கிட்டே திருமணயோகம் வரும் காலத்தைச் சொல்ல வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் தெய்வத்திருமண விழாவில் கலந்துகொண்டாலே திருமணத்தடை என்பது நீங்கிவிடும்.

?மந்திரித்த தாயத்து அணிவதால் என்ன பலன்? தாயத்துக்குள் என்ன இருக்கும்?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

மந்திரித்த தாயத்து என்று சொல்லிவிட்டீர்களே, அப்படியென்றால் அதற்குள் மந்திரசக்தி என்பது நிறைந்திருக்கும் என்பதுதானே பொருள். கடுமையான பிரச்னையை எதிர்கொள்பவர்களுக்கு, தாயத்து மந்திரித்துத் தருகிறார்கள். தாயத்து என்பது சற்று மெலிதான சிறு உருளை போன்ற அமைப்பினை உடையது. அதன் ஒரு முனையில் மூடி போன்ற அமைப்பு இருக்கும். அந்த மூடியைத் திறந்து அதற்குள் ஹோமம் செய்த சாம்பலை வைத்து, அவரவர் பிரச்னைக்கு ஏற்றவாறு அதனை எதிர்கொள்ளும் விதமாக மந்திர உச்சாடனம் செய்வார்கள்.

தனிப்பட்ட முறையில் மிகவும் சவாலான பிரச்னையைச் சந்திப்பவர்களுக்காக பிரத்யேகமாக ஹோமம் செய்து, அந்த பஸ்மத்தை தாயத்துக்குள் வைத்து மந்திர உச்சாடனம் செய்து கைகளிலோ, கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டிவிடுவார்கள். இதன்மூலமாக அந்த நபர் எதிர்மறை சக்திகளிடம் இருந்து காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறார் என்பதே தாயத்து தரும் பலன் ஆகும்.

?கண்ணை மூடிக்கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே, உண்மையா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.

நம் வீட்டு பூஜை அறையிலோ, வியாபார ஸ்தலங்களிலோ அல்லது திடீரென்று ஒரு அவசர ஆபத்தான சூழலிலோ இறைவனை வழிபடும்போது கண்ணை மூடி தியானித்து மனக்கண் முன்னால் இறைவனின் திருவுருவத்தைக் கொண்டுவந்து வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஆலயத்திற்குச் சென்று இறைமூர்த்தங்களை தரிசிக்கும்போது, கண்களைத் திறந்து தரிசனம் செய்ய வேண்டும். நேத்ர தரிசனம் என்று சொல்வார்கள். முதலில் திருப்பாதங்களை தரிசனம் செய்துவிட்டு அதன்பின்னர் இறைவனின் கண்களை நேருக்குநேராகக் கண்டு தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசனம் செய்யும்போது ஞானஒளி என்பது நமது மனதிற்குள் ஊடுருவி ஆத்மஞானத்தைத் தருகிறது. மனமும் தெளிவு பெறுகிறது.

?மூத்த குடிமக்களுக்கு ராசிபலன்கள் முழுமையாக பொருந்துவதில்லையே?
– டி.நரசிம்மராஜ், மதுரை.

பொதுவாக, ராசிபலன்களைப் பார்த்து அவ்வாறு முடிவு செய்யக் கூடாது. மூத்தகுடிமக்கள் என்றில்லை, எல்லோருக்குமே அவரவருடைய தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படிதான் பலன் என்பது நடக்கும். பொதுவாக சொல்லப்படும் ராசிபலன் என்பது நடுத்தர வயது உடையவர்களைக் கொண்டும், குடும்பஸ்தர்களைக் கொண்டும் சொல்லப்படுகிறது. அவரவர் வயதிற்கேற்றாற்போல் அதனைப் பொருத்திப் பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு பலன் பார்க்கும்போது, அது எல்லா வயதினருக்குமே சரியான பலனைத்தான் உரைக்கும்.

?கண்டகச் சனியின் பாதிப்பில் அவதிப் படும் நான் எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

ஆஞ்சநேயஸ்வாமியை வழிபட்டு வாருங்கள். சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.

?மூலஸ்தானத்தில் இருக்கும் இறைவனைவிட கொடிமரத்திற்கு அதிக சக்தி என்று கூறுவது? ஏன்?
– வண்ணை கணேசன், சென்னை.

முற்றிலும் தவறான கருத்து. மூலஸ்தானம் என்பதுதான் அந்த ஆலயத்தின் ஆதாரசக்தி. அங்கிருந்துதான் ஆலயத்தினுடைய மற்ற பகுதிகளுக்கு சக்தி என்பது கடத்தப்படுகிறது. கொடிமரம் என்பது ஏரியல் டவர் போன்றது. அது ஒரு டிரான்ஸ்மீட்டர் ஆகத்தான் செயல்படு கிறதே தவிர, சக்தியை உருவாக்கித் தராது. மூலஸ்தானத்தில் இருக்கும் இறைவனே ஆதாரசக்தி என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது.

?நமது தமிழகத்தில் ஜாதகம் கணிக்கும்போது மாந்தி கிரகத்தை குறிப்பதில்லை. ஆனால், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் மாந்தியை குறிக்கிறார்களே? என்ன காரணம்?
– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

மாந்தி என்பது சனிகிரஹத்தின் துணைக்கோள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள ஜோதிட நூல்களில் ராகு – கேது பற்றிய குறிப்புகள் கிடையாது. அதற்கு முன்னர் ஜாதகம் கணித்தவர்கள் ஏழு கிரஹங்களை மட்டும் கொண்டு பலன் உரைத்தார்கள். இந்த ஏழுகிரஹங்களையே வார நாட்கள் ஆகவும் அமைத்தார்கள். அதன்பின் கிரஹணங்கள் பற்றிய ஆராய்ச்சியின் மூலமாக ராகு – கேது ஆகிய நிழற்கோள்களைப் பற்றி அறிந்தார்கள். காலப் போக்கில் ஒவ்வொரு கிரஹத்திற்கும் ஆன துணைக் கோள்களைப் பற்றி அறிந்தார்கள். இந்த துணைக்கோள்களில் சனியின் உபகிரஹம் ஆன மாந்தி என்பதன் தாக்கம் தனிமனிதனின் செயல்பாடுகளில் குறுக்கிடுகிறது என்பதைக் கண்டறிந்து,
மாந்தியையும் சேர்த்து எழுதும் வழக்கம் உண்டானது.

சனி எனும் கிரஹம் கெடுபலன்கள் மட்டுமல்லாது நற்பலன்களையும் தரவல்லது. ஆனால், மாந்தி என்பது சனியின் கெடுபலன்களை மட்டும் உள்வாங்கி தனது வீரியத்தையும் சேர்த்து மனிதனின் மீது தாக்கத்தினை உண்டாக்கும் வல்லமை பெற்றது. கேரளத்தைச் சேர்ந்தவர்கள், அதர்வண வேதத்தின் அடிப்படையில் உண்டான மாந்த்ரீகத்தில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், இந்த மாந்தியின் தாக்கத்தில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் நோக்கில் அதனையும் சேர்த்து கணக்கீடு செய்கிறார்கள். தற்காலத்தில் தமிழகம் உட்பட எல்லோருமே மாந்தியையும் சேர்த்து ஜாதகத்தில் குறிப்பிடும் முறையை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.

The post மிதுனம் ராசி உள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு திருமணம் நடைபெறுமா? appeared first on Dinakaran.

Read Entire Article