சென்னை: “மிக்ஜாம், ஃபெஞ்சல் புயலுக்கு இதுவரையில் மத்திய அரசின் சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. இது தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபெஞ்சல் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. 30 பேர் உயிரிழந்துள்ளனர், 1,69,043 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தற்போது கடந்த இருதினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.